Home செய்திகள்மாநில செய்திகள் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?-வெள்ளை அறிக்கை வெளியிட பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?-வெள்ளை அறிக்கை வெளியிட பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..

by Askar

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?-வெள்ளை அறிக்கை வெளியிட பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும் போது முதலமைச்சர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண்பாடுகள் தான் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’திமுகவின் இரண்டாண்டு ஆட்சியில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப் பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு அரசுப் பணிக்கு இன்னும் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும் பிற நடைமுறைகள் இன்னும் நிறைவடைய வில்லை. பிற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1598 பேருக்கு இப்போது தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியானால், எங்கிருந்து 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன? என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்.

முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 24,879 பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை, ஐந்தாண்டுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒரு லட்சம் பேருக்கு வேலை என மொத்தம் ஆறரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் 10% அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து 70 லட்சம் பேர், பதிவு செய்யாமல் 60 லட்சம் பேர் என மொத்தம் 1.30 கோடி பேர் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நிலையில், அரசு வேலைகளை வழங்குவதி அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்னும் இரு ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், அக்காலத்தில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இன்னும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட, ஒட்டுமொத்தமாக அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கும். இதற்கும், திமுக அளித்த வாக்குறுதிக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இது தமிழ்நாட்டில் படித்து விட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு ஒப்பானது ஆகும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 3 ஆண்டுகளில் இதுவரை எந்தெந்த துறைகளில், எந்தெந்த நிலைகளில் எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும்; தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது? என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!