பிரதமரின் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்: பயனாளிகளுக்கு அடையாள அட்டையை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் வழங்கினார்..

பிரதமரின் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்: பயனாளிகளுக்கு அடையாள அட்டையை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஓய்வூதிய அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் வழங்கினார்.

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தினை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயனாளிகள் ஓய்வூதிய அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் கலந்துகொண்டு, பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஓய்வூதிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பகுதி 42 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் கடுமையான உழைப்பிலும் வியர்வையிலும் பெறப்படுகிறது. நம்முடைய தினசரி வாழ்வில் தெரு வியாபாரிகள், ரிக்சா தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், விவசாய தொழிலாளிகள், பீடி சுருட்டும் தொழிலாளிகள், நெசவாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளிகள் இதுபோன்ற பல்வேறு பணிகளில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற பல்வேறு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் மூலமாக மருத்துவ உதவியும், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மூலமாக ஆயுள் காப்பீடும், பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீடும் வழங்கி வருகிறது.

முதுமை காலத்தில் பிறர் உதவியின்றி அனைவரும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக ஓய்வூதிய திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு (பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM)) அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று பாரத பிரதமர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தினை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டையினை வழங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து, நமது மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, 20 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில், மாத வருமானம் ரூ.15,000/- வரை பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தன்னிச்சையாக இணைந்து தொடர்ந்து சந்தா செலுத்துவதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து அபைபு சாரா தொழிலாளர்களும் இணைந்து கொள்ளலாம்.

வீட்டு வேலை செய்பவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், செங்கல் சூலை தொழிலாளிகள், செருப்பு தைக்கும் தொழிலாளிகள், சலவை தொழிலாளிகள், ரிக்ஷா தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள், நெசவாளர்கள், பீடி தொழிலாளிகள் மற்றும் பிற அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் இணையும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஒரு சிறு தொகையை மாதாந்திர சந்தாவாக தங்களின் பணிக்காலத்தில் செலுத்துவதன் மூலம் 60 வயதைக் கடந்த பின்னர் அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான ஓய்வூதியமாக ரூ.3,000/- வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசும் இத்திட்டத்திற்காக, தொழிலாளர்கள் செலுத்தும் சந்தாவிற்கு இணையான தொகையை தனது பங்காக மாதந்தோறும் தொழிலாளர்களின் ஓய்வூதிய கணக்கில் செலுத்தும். 60 வயதைக் கடந்த ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்களின் இறப்பிற்கு பிறகு அவரின் கணவன் / மனைவிக்கு 50 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

முறையாக சந்தா செலுத்தும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 60 வயதுக்கு முன்பாக இறக்க நேரிட்டால் அவரின் கணவன் / மனைவி இந்த திட்டத்தில் இணைந்து தொடர்ந்து சந்தா செலுத்த இயலும். உறுப்பினரின் மாத சந்தா தொகை ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ் இணையும் தொழிலாளர்கள் இதற்கான படிவங்களை அவர்களின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் கையொப்பமிட்டு பொது சேவை மையங்களில் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் சந்தா தொகை மாதம்தோறும் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள சம்மதிக்கும் ஒப்புகை படிவத்தை கையொப்பமிட்டு தன்னுடைய வங்கி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை இத்திட்டத்தின்கீழ் பயன்பெற நமது மாவட்டத்தில் இருந்து 583 அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். இன்னும் தகுதிவாய்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிகளவில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் பேசினார்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக இணை இயக்குநர் அருள்ராஜ், தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) க.பாலமுருகன், ஆயுள் காப்பீட்டு கழகம் கிளை மேலாளர் முத்துசாமி, பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகேயன், தொழிலாளர் வைப்பு நிதி அலுவலக அமலாக்க அலுவலர் சப்ரினா மற்றும் அலுவலர்கள், அமைப்பு சாரா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.