கோவில்பட்டியில் விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்யும் தனியார் மது கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேமுதிக கோரிக்கை ..

கோவில்பட்டியில் அரசு விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட மது விற்பனை செய்யும் தனியார் மதுக் கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிகவினர் வலியுறுத்தியுள்ளனர். தேமுதிக நகர செயலாளர் பழனி தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கோவில்பட்டி நகரம் மற்றும் தீயணைப்பு நிலையம் எதிரில் செயல்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மதுக்கூடங்களில் மது விற்பனை செய்ய அரசு நிர்ணயம் செய்த காலை 11 மணி முதல் இரவு 11மணி வரை என்பதனை மீறி 24மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தினை தவிர்த்து மற்ற நேரங்களில் 2 முதல் 3மடங்கு அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இது தவிர அரசு விடுமுறை நாள்களிலும் சட்ட விதிமுறைகளை மீறி தங்கு தடையின்றி மது விற்பனை செய்யப்படுகிறது என்று, சட்ட விதிமுறைகள் குறித்து கேட்டால் அதன் உரிமையாளர், தான் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவருவதாக ஆணவமாக பேசி வருவதாகவும்,  சட்ட விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்யப்படுவதால் அரசினால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் வருவாய் குறைந்துள்ளது என்றும், எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவினை பெற்று கொண்ட கோட்டாட்சியர் விஜயா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதில் தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மலைராஜ், ஒன்றிய செயலாளர் சுரேஷ் , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அழகிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி