நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தை பூட்டி சீல் வைத்தது ஜனநாயக விரோதம் – இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் கண்டனம்..

திருநெல்வேலியில் பத்திரிக்கையாளர் மன்றத்தை பூட்டியது ஜனநாயக விரோதம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளார். இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாதிரி நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. பத்திரிக்கையாளர் கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சி தலைவர் பேட்டி அளித்ததால், பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் பத்திரிகையாளர் மன்றத்தை பூட்டி சீல் வைத்துள்ளார்.

மாநகராட்சி ஆணையரின் இந்த புகார் நியாயமற்றது என்றும், பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி மட்டுமல்ல தேர்தலில் ஈடுபடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட பொது வாழ்வுப் பிரமுகர்கள், செய்தியாளர்களை சந்தித்து பேசுவது மற்றும் பேட்டியளிப்பது போன்றவைகள் எல்லாம் வழக்கமாக நடைபெற்று வந்துள்ளது.

இது எந்த வகையிலும் மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகாது. மாறாக, ஆணையரின் நடவடிக்கை கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைகளையும், பத்திரிகை சுதந்திரத்தையும், மறுப்பதாகவே அமைத்துள்ளது. ஜனநாயக உரிமைகளை மறுத்துள்ள திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது.

இதன் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் இயல்பாக வழக்கம் போல் செயல்பட உரிய உத்திரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

#Paid Promotion