நிலக்கோட்டை காவல் துறையினருக்கு காவலர் குடியிருப்புகள் கிடைக்குமா..? கிடைக்காதா..? ஏக்கத்தில் காவலர்கள்! அச்சத்தில் பொதுமக்கள்..

நிலக்கோட்டையில் தற்போது இருக்கும் காவலர் குடியிருப்பு புதர்கள் மண்டி சுவர்கள் இடிந்து சுடுகாடு போல் காட்சி அளிக்கிறது. அனாதை போல் கிடக்கும் இந்த காவலர் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் பாம்புகள் கொட்டி கிடக்கிறது. விஷ ஜந்துக்களுக்கு பயந்து பள்ளிக்குழந்தைகளும் பொதுமக்களும் இந்த வழியாக வருவதை தவிர்த்து வருகின்றனர்‌.

நிலக்கோட்டை ஊருக்கு உள்ளேயே முக்கியமான பகுதியில்தான் இந்த கேட்பாரற்ற கட்டிடங்கள் உள்ளது என்பது தான் மிகுந்த வேதனை அளிக்கும் விஷயம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் ஆகும். மற்றும் அதோடு ஒரு மகளிர் காவல் நிலையம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள பெருமை நிலக்கோட்டை காவல் நிலையத்தை மட்டுமே சாரும்.

இந்நிலையில் நிலக்கோட்டை தாலுகா துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, விளாம்பட்டி, அம்மையநாயக்கனூர், விருவீடு மற்றும் நிலக்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் இவை அனைத்தும் அடங்கும். இவைகளில் அம்மையநாயக்கனூர், விளாம்பட்டி, வத்தலக்குண்டு போன்ற காவல் நிலையங்களுக்கு மட்டுமே காவலர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது.

இருப்பினும் தலைமை காவல் நிலையமான நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு குடியிருப்பு வளாகம் இருந்தும் இல்லாமல் சரியான முறையில் பராமரிக்காத காரணத்தால் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேலும் புதர்கள் மண்டி போய் அதிகளவில் பாம்புகள் நடமாடும் இடமாகவும் இருக்கிறது.

தேர்வுநிலை பேரூராட்சியான நிலக்கோட்டையில் அடிக்கடி வரும் வம்பு வழக்குகள், சிறு, பெரு விபத்து, கட்சிகளின் பொதுக்கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், என ஏராளமான பாதுகாப்பு மற்றும் வாகன சோதனை என்று பணிச்சுமை இருந்து வரும் சூழ்நிலையில் காவலர்கள் பற்றாக்குறை வேறு!

இதனால் சதா எந்நேரமும் குடும்பத்தை மறந்து கடமை ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கும் கண்ணியமிக்க காவல்துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதன்மூலம் பொதுமக்கள் மத்தியிலும் அவர்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றன.

ஆகவே இந்த குறைகளை களைய நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டித்தர வேண்டியும், காவல் நிலைய வழக்குகளுக்கு ஏற்றவகையில் அதிகளவில் காவலர்களை பணியமர்த்தவும், இப்பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே இந்த வார்டுக்கு கவுன்சிலராகவும் தற்போது திமுகவின் நிலக்கோட்டை கழக செயலாளராகவும் இருக்கும் ஜோசப் கோவில்பிள்ளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆகையால்,
திமுகவின் நிலக்கோட்டை கழக செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை அவர்களிடம் பேசினோம் அவர் கூறுகையில், “நிலக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவில் மற்றும் குற்றவியல் கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பிரபலமான நகை கடைகள் ஆகியவைகள் உள்ள காரணத்தால் எப்போதுமே நிலக்கோட்டை பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை தான் இருக்கும்.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஊரில் காவலர்களுக்கு பஞ்சம் இருப்பது வேதனை அளிக்கும் விஷயம் தான். மேலும் காவலர்களுக்கு குடியிருப்புகள் இல்லாத காரணத்தினால் வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து, காவலர்கள் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் வந்து வேலை செய்யும் சூழ்நிலை உள்ளது.

ஏற்கனவே பலமுறை இது சம்பந்தமாக மேலதிகாரிகள் இடத்தில் முறையிட்டு இருந்தோம் அதனடிப்படையில் அந்த பாழடைந்த கட்டிடங்களை இடித்து புதியதாக கட்டிடங்கள் கட்ட இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கிறது.

ஆகவே காவலர்கள் நலன் கருதியும் பொதுமக்கள் நலன் கருதியும் காலதாமதம் இல்லாமல் உடனடியாக நிலக்கோட்டையில் காவலர் குடியிருப்பு கட்டி தர வேண்டும் எனவும் காவலர்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார்.

மேலும் அந்த பயனற்ற கட்டிடங்களின் கதவுகள் திறந்தே கிடப்பதால், சில சமூக விரோத செயல்களும் நடைபெற்று வந்தது, மது அருந்துவது இரவு நேரங்களில் விபச்சாரம் போன்ற வேறு சில சமூக விரோத செயல்களும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அருகே கல்வி நிலையம் மற்றும் அதிகளவில் குடியிருப்பு பகுதிகள் ஆகியவை அமைந்துள்ள காரணத்தால் அரசு போர்க்கால அடிப்படையில் அந்த கட்டிடங்களை இடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பு செய்திகள்: ஜெ.அஸ்கர்