Home செய்திகள்உலக செய்திகள் திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா..

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா..

by Abubakker Sithik

நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா..

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் 18.02.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், ரூ 149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, வருவாய்த்துறையின் மூலம் கருணை அடிப்படையில் 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சிறுதானிய மதி உணவகம் தொடங்குவதற்கான சாவியையும் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.52 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய இருசக்கர வாகனங்களை வழங்கி, பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நெல்லையப்பர் கோவில், சமாதானபுரம், வீரள பெருஞ்செல்வி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களின் கோரிக்கையினை உடனுக்குடன் பரிசீலனை செய்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் கல்வி பயின்ற மாணவியர்களுக்கு உயர்கல்வி தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மகளிர்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் தகுதியான மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வேகமாக முன்னேறி வரும் மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டம் வளர்சசி பாதையில் செல்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி திருநெல்வேலி மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.85.56 கோடி மதிப்பில் சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அபிவிருத்தி பணிகளும், ரூ.6.44 கோடி மதிப்பில் மாநகராட்சிக்குட்பட்ட டார்லிங் நகரில் உள்விளையாட்டு அரங்கமும், ரூ.14.94 கோடி மதிப்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகம் நிலை 1, ரூ 11.73 கோடி மதிப்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகம் நிலை.2, ரூ.12.82 கோடி மதிப்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடமும், ரூ.3.69 கோடி மதிப்பில் மாநகராட்சி வர்த்தக மையம் அருகில் தொழில் முனைவோர் கூட்ட அரங்கம் மற்றும் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைகுளம் மற்றும் 12 குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.12.05 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும், மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.144.69 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 அங்கன்வாடி கட்டடங்கள், 2 கிராம ஊராட்சி செயலகங்கள், பொது விநியோக கடை, சிறுதானிய மதி உணவகம் ஆகிய 8 கட்டடங்களும், வேளாண்மைத் துறை சார்பில் பழவூரில் ரூ.38 இலட்சம் மதிப்பில் துணை வோளண்மை விரிவாக்க மையக்கட்டிடம், வேளாண்மை மற்றும் விற்பனை வணிகத் துறையின் மூலம் சிவந்திபட்டியில் ரூ.34 இலட்சம் மதிப்பில் உலர்களம் மற்றும் தரம் பிரித்தல் கூடம் என மொத்தம் ரூ.149.40 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு களக்காடு நகராட்சி, மற்றும் நாங்குநேரி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, பணகுடி, ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு ரூ.423.13 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கிராமங்கள் மற்றும் நகரங்கள் வரை திராவிட மாடல் அரசு சீராக செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மக்களுடன் மக்களாக தமிழ்நாடு அரசு என்றைக்கும் இணைந்திருக்கும்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பல்வேறு இடங்களில் வெள்ள சூழ்ந்த பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, அனைத்து அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப்பணிகளை துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதால் வெள்ள பாதிப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் கடைசி வரை செயல்பட்டு நிலைமை சரி செய்யப்பட்டது. எப்படிபட்ட சூழ்நிலைகள் வந்தாலும் தமிழ்நாடு அரசு திராவிட மாடல் அரசு மக்களுடன் என்றும் உடன் இருக்கும். பல்வேறு சூழ்நிலைகளில் தமிழ்நாடு இந்தியாவிலே முதன்மையாக திகழ்கிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவிக்கும் திட்டங்கள் ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், இயக்குநர், நகராட்சி நிருவாக இயக்குநரகம் சு.சிவராசு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா. ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்துல் வகாப் (பாளையங்கோட்டை), காதர் பாட்ஷா (இராமநாதபுரம்), சண்முகையா (ஓட்டபிடாரம்), மாநகராட்சி மேயர்கள் பி.எம்.சரவணன் (திருநெல்வேலி), மகேஷ் (நாகர்கோவில்), மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், துணை மேயர் கே.ஆர்.ராஜீ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!