Home செய்திகள் தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்; பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் தீர்மானம்..

தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்; பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் தீர்மானம்..

by Abubakker Sithik

தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் அமைத்திட வேண்டும்; நெல்லையில் நடந்த பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் தீர்மானம்…

நெல்லையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் “தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்” அமைத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை பொதிகை தமிழ்சங்கத்தின் 9-வது ஆண்டு தொடக்கவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பாளையங்கோட்டை வீரபாண்டியன் மஹாலில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு பொதிகைத் தமிழ்ங் சங்க சாதனை மலரை வெளியிட்டு, விருதாளர்களுக்கு விருதுகள் மற்றும் கவிஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி விழாப் பேருரையாற்றினார். சாதனை மலரை சட்டமன்றப் பேரவைத் தலைவர் வெளியிட முதல் பிரதியை கிறிஸ்தவ தேவாலய பணியாளர் நல வாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் சு.சுப்பிரமணியன், எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், கவிஞர் பாமணி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை அருணா கார்டியாக் கேர் நிறுவுநர் முனைவர் ஸ்வர்ணலதா சமூகப்பணிச் சுடர் விருதும், திருநெல்வேலி கல்விக் கழக செயலாளர் மு. செல்லையா கல்விப்பணிச் சுடர் விருதும், முனைவர் இரா.முருகன் தமிழ் பணிச் சுடர் விருதும், பொதிகைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன் தமிழ்ப் பணிச்சுடர் விருதும் பெற்றனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டுக் கவியரங்கம் நடந்தது. கவியரங்கத்தினை பாளையங்கோட்டை அரும்புகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முனைவர் இராஜ.மதிவாணன் தொடங்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் அரங்க. சக்திவேல் மற்றும் கவிஞர் திண்டுக்கல் அ. ஷாஜகான் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். கவியரங்கில் சென்னை முதல் நாகர்கோவில் வரை பல்வேறு ஊர்களில் இருந்து கவிஞர்கள் வருகை தந்தனர். முன்னதாக பேச்சிலும் மூச்சிலும் தமிழே என்ற தலைப்பில் கவிதைப் போட்டி ஒன்றும் நடைபெற்றது. சிறப்பாக கவிதை எழுதிய நாகர்கோவில் வனச்செல்வி அரவிந்தன் முதல் பரிசும், கடலூர் வழககறிஞர் விஐயா இரண்டாம் பரிசும், தஞ்சாவூர் மாணவி பூங்குழலி மூன்றாவது பரிசும் பெற்றனர். பிற்பகலில் கவிஞர் பாமணி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி பேராசிரியர் அப்துல் காதர் நிறைவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் “தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசைக் கொள்வது, 2025-ஆம் ஆண்டில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி நடத்தப்படும் என அறிவித்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, இந்த மாநாட்டிற்காக அமைக்கப்பட இருக்கும் பல்வேறு குழுக்களில் பொதிகைத் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டும், தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியை இந்த ஆண்டு நெல்லையில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டும், தமிழ்நாட்டில் நிதிப் பற்றாக்குறையால் பல தமிழ்ச் சங்கங்கள் நலிவடைந்து வருவதைக் கவனத்தில் கொண்டு தமிழ்ச் சங்கங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவிஞர் மு.முத்துக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழகமெங்கிலும் இருந்து ஏராளமான கவிஞர்களும், தமிழன்பர்களும் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா செய்திருந்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்தக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com