செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுரண்டை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் பொதுமக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை 17வது வார்டுக்குட்பட்ட சிவகுருநாதபுரத்தில் தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு செல்போன் டவர் அமைக்க முயற்சி செய்தது. செல்போன் டவர் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர் வீச்சால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் என்ற அச்சத்தால் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் டவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுரண்டை நகர அதிமுக செயலாளர் வி.கே.எஸ். சக்திவேல்,வசந்தன், காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி வி.எஸ். சமுத்திரம்,நகர பாஜக தலைவர் அருணாசலம், ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன், மெடிக்கல் கார்த்திக் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் சுரண்டை பேரூராட்சி அலுவலகத்தை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் முற்றுகையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசி தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்றும், பொது மக்களின் எதிர்ப்பை நீதிமன்றத்தில் தெரிவித்து சட்டப்படி நிரந்தரமாக செல்போன் டவர் அமைப்பது தடுத்து நிறுத்தப்படும் எனவும் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.