தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தின விழா.

திருநெல்வேலி மாவட்ட மன நலத்திட்டம் சார்பாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் “உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம்” அனுசரிக்கப்பட்டது. விழாவினையொட்டி பயிற்சி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி,கட்டுரை போட்டி,வாசகப்போட்டி நடைபெற்றது. போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு இணை இயக்குநர் (பொறுப்பு) கிருஷ்ணன் , மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், மரு.விஜயகுமார், ஓவிய ஆசிரியர் ராஜு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.நிகழ்வில் தொடர்ந்து மாவட்ட மன நல மருத்துவர் நிர்மல் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் பேசியதாவது: விபத்து காயங்களுக்கு அடுத்து அதிக அளவிலான தவிர்க்க கூடிய உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பது தற்கொலை முயற்சிகளே. தற்கொலை எண்ணம் தோன்ற பல காரணங்கள் இருந்தாலும் “மன அழுத்தமே முக்கிய காரணமாக” உள்ளது. இன்றைய வாழ்க்கை சூழலில் அனைத்து வயதினரும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர்மாணவர்களுக்கு கல்வியில் ஏற்படும் சிரமங்கள், வளர் இளம் வயதினருக்கு ஏற்படும் உணர்வு மாற்றங்கள், திருமண வாழ்வில் ஏற்படும் மனக்கசப்புகள், வயதான காலத்தில் ஏற்படும் தனிமை இவை அனைத்தும் மன அழுத்தம் ஏற்பட காரணிகளாக அமைகின்றன. தகுந்த நேரத்தில் சரியான ஆலோசனைகள் அளிப்பதன் மூலம் தற்கொலை முயற்சியை தவிர்க்கலாம். அரசின் தற்கொலை தடுப்பு சிறப்பு ஆலோசனை எண் 104 ஐ பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். இந்த விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள்,பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்