
திருநெல்வேலி அரசு அருகாட்சியகத்தில் நெல்லையின் வரலாற்றை விளக்கும் வகையில் “நெல்லை தின விழா” நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கிலேயர்களால் திருநெல்வேலி ஜில்லா 1791, செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும் சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கமும் இணைந்து அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளி கலையரங்கத்தில் சிறப்பான வரலாற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐபிஎஸ் தலைமை தாங்கி உரையாற்றினார். நெல்லை அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி முன்னிலை வகித்து உரையாற்றினார். விழாவில் வரலாற்றில் நெல்லை என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. அதில் எழுத்தாளரும், மாவட்ட கலை அமைப்பின் துணைச் செயலாளருமான இரா. நாறும்பூநாதன் பங்கேற்று நெல்லைச் சீமையின் வரலாற்று நிகழ்வுகளைக் கண் முன் காட்டுவது போல் விளக்கி பேசினார்.
அதில் குளோரிந்தா சர்ச், ரேனியஸ் ஐயர், கோபாலசுவாமி வரலாறு, பாளையங்கோட்டையின் கோட்டை வரலாறு என ஊரின் ஒவ்வொரு மூலையைப் பற்றிய வரலாறுகளை சுவை பட எடுத்துரைத்தார். அடுத்ததாக பேசிய எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான முத்தாலாங்குறிச்சி காமராசு பொதிகை மலை அனுபவங்கள், பேக்லாண்டு, மடப்பைய போன்ற வட்டார வழக்கு சொற்களின் உண்மை வரலாறுகள், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் போன்ற பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்தார். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர்களான முனைவர். கட்டளை கைலாசம், எழுத்தாளர். எம். எம். தீன், அக்சஸ் ஆனந்த், ஹரி பிரதான், அஜித் சாய் ஆகியோருக்கு காவல் கண்காணிப்பாளர் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் மற்றும் செயலாளர் பொறியாளர் சங்கர் மணி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.