பேருந்தில் இறங்கும் போது தங்க செயின் திருட முயற்சி;பெண் கைது..

பாவூர்சத்திரம் பகுதியில் பேருந்து பயணியிடம் நகையை திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலப் பட்டினத்தில் வசித்து வரும் தங்கபுஷ்பம் (33) என்பவர் திருநெல்வேலியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பேருந்தில் பாவூர்சத்திரம் வந்து இறங்கிய போது அவரின் பின்னால் இருந்த பெண் தங்க புஷ்பத்தின் கையில் வைத்திருந்த பையிலிருந்து தங்க சங்கிலியை திருட முயன்றுள்ளார். சுதாரித்து கொண்ட தங்கபுஷ்பம் மற்றும் அவரின் உறவினர்கள் சேர்ந்து அப்பெண்ணை கையும் களவுமாக பிடித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் சங்கிலியை திருட முயன்ற பெண் மானாமதுரை சர்க்கஸ் காலனியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி காளியம்மாள்(28) என்பது தெரிய வந்தது.இது குறித்து அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்