தேசிய கீதம் பாடப்படாத அரசு விழா;பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்ட துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அருணா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் 1808 பயனாளிகளுக்கு மருத்துவ தொகுப்புகள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் வழங்கி பேசினார். தொடர்ந்து மக்களை தேடி நிகழ்ச்சிக்கான நடமாடும் வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிலையில் அரசு விழாக்களின் துவக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் பாடப்படுவதும் மரபாகும். ஆனால் கடையாலுருட்டியில் நடந்த அரசு விழாவில் தேசிய கீதம் பாடப்படவில்லை. இது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மதன் சுஜாகர், மாவட்ட தொற்றாநோய் திட்ட அலுவலர் கோகுல், மாவட்ட உதவி திட்ட மேலாளர் டாக்டர் கீர்த்திகா, மருத்துவ அலுவலர் பெரோஸ்கான் சித்த மருத்துவர் டாக்டர் சரிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் சுப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், கடையாலுருட்டி கிளைக் கழக திமுக செயலாளர் சேர்மன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பால் (எ) சண்முகவேல், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகையா, சோனியா பேரவை மாவட்ட தலைவர் பிரபாகர், மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதி தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அரசு விழாவில் தேசிய கீதம் பாடாமல் முடிந்தது சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்