சுரண்டை அருகே வெள்ள முன்னெச்சரிக்கை; வீகேபுதூர் தாசில்தார் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் சுரண்டை அருகே உள்ள தாயார் தோப்பு அனுமன் நதி தடுப்பணை ஷட்டர்களை‌ வீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ், மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தென்காசி மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடவிநயினார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. விரைவில் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுரண்டை அருகே தாயார் தோப்பு பகுதியில் உள்ள அனுமன் நதி மற்றும் சிற்றாறு சேருமிடத்தில் அடவிநயினார் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடும் பட்சத்தில்‌ ஆற்றில் வரும் தண்ணீரை சீராக செல்லும் வகையில் வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள், வீகேபுதூர் ஆர்ஐ மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிற்றாறு மற்றும் வீராணம் கால்வாயில் உள்ள ஷட்டர்களை போதுமான அளவு உயர்த்தி வைத்தும், அதிக அளவில் நீர் வரும் பட்சத்தில் சிற்றாற்றில் கலந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் கால்வாய் வரை செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும் ஆறுகள், குளங்களின் கரைகளையும் ஆய்வு செய்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..