Home செய்திகள் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்; எஸ்டிபிஐ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்; எஸ்டிபிஐ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

by mohan

புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் வலியுறுத்தியுள்ளது.தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பொதுச் செயலாளர் ஷேக் ஜிந்தா மதார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சினா, சேனா சர்தார், இம்ரான் கான், மாவட்ட பொருளாளர் முஹம்மது நைனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் களப்பணி குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1. எஸ்டிபிஐ கட்சி துவங்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து 13-ஆம் ஆண்டு எதிர்வருகின்ற ஜூன் 21 ஆம் நாள் துவங்குகிறது. கட்சியின் துவக்க தினத்தை எழுச்சியோடு கொண்டாடும் வகையிலும், தற்போது கொரோனா தொற்று காலம் என்பதாலும் நலத்திட்டங்கள், கபசுர குடிநீர் வழங்குதல் என மக்களுக்கு பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும்.

தீர்மானம் 2. தென்காசி மாவட்டம் வடகரை நகர கமிட்டி சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள அவசர ஊர்தி ( AMBULANCE ) அர்ப்பணிப்பு நிகழ்ச்சியை கட்சியின் துவக்க தினத்தன்று சிறப்பாக நடத்துவது..

தீர்மானம் 3. தென்காசி மாவட்டம் குற்றாலம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலம். ஆண்டு தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாத சீசன் காலத்தில் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சீசன் தொழிலை நம்பி 800 விடுதிகளும், 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. ஆண்டுக்கு அரசுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் வரும் குற்றாலம் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதனால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளாகி இருக்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளுடன் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 4. தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் முகவரியை மருத்துவமனை ஊழியர்கள் பிழைகளுடன் பதிவு செய்கின்றனர். இதனால் இறப்பு சான்றிதழ் எழுத்துப் பிழைகளுடன் வழங்கப்படுவதால் சரி செய்வதற்கு பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே நோயாளிகளின் முகவரியை முழுமையாக கேட்டறிந்து எழுத்துப் பிழை இல்லாமல் பதிவு செய்வதோடு இறப்பு சான்றிதழ் சரியாக வழங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இறுதியில் மாவட்ட செயலாளர் இம்ரான் கான் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com