Home செய்திகள் தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் தொடரும் மின்தடை; விரைந்து சரிசெய்ய கலெக்டரிடம் அபுபக்கர் எம்எல்ஏ வலியுறுத்தல்..

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் தொடரும் மின்தடை; விரைந்து சரிசெய்ய கலெக்டரிடம் அபுபக்கர் எம்எல்ஏ வலியுறுத்தல்..

by mohan

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பூங்கோதை எம்எல்ஏ ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தனர். அப்போது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டி காட்டினர். வாக்கு எண்ணும் நாளன்று கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், ஹக்கீம், பாட்டப்பத்து கடாபி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையம் கொடிக்குறிச்சி யூஎஸ்பி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. 3-அடுக்கு பாதுகாப்புடன் இரவு, பகலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் இப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால், சிசிடி கேமரா அவ்வப்போது செயல்படாமல் தடைபடுகிறது என்றார். இதுவரை நான்கு முதல் ஐந்து முறை சிசிடிவி கேமரா தடைபட்டுள்ளது என்றார். மேலும் கொரோனா ஊரடங்கு தடை காலத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். இனிமேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்சாரம் தடைபடாமல் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்ததாக தெரிவித்தார்.

முன்னதாக, தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் நள்ளிரவு மின்தடை ஏற்படுவதாக மதிமுக சார்பில், தென்காசி மாவட்ட மதிமுக செயலாளரும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற திமுக கூட்டணி வேட்பாளரின் தலைமை முகவருமான வழக்கறிஞர் திருமலாபுரம் திமு.இராசேந்திரன் தென்காசி கலெக்டருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பிருந்தார்.அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6 அன்று பதிவான அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் தென்காசி இ.விலக்கு பகுதியில் உள்ள யுஎஸ்பி கல்வி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முகவர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை 4.50 மணி அளவில் வேட்பாளர்களின் முகவர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறையில் சுமார் 4 நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டு அனைத்து ஸ்கிரீன்களும் இயங்காமல் செயல் இழந்து உள்ளன. அதற்கான படங்களை இத்துடன் இணைத்துள்ளேன். தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் மின் தடை ஏற்படுவது இது முதல்முறை அல்ல இது தொடர் நிகழ்ச்சியாக நடைபெற்று உள்ளது. சரியாக நான்கு முறை இவ்வாறு நடந்து உள்ளன.தாங்கள் தக்க விதத்தில் உத்தரவு பிறப்பித்து மின்தடையோ, இணைய இணைப்புகளில் தடையோ அறவே இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். தவறு ஏதேனும் நடக்க இது போன்ற செயல்கள் காரணமாக இருக்குமோ என்கிற ஐயத்தை எதிர்க்கட்சிகளான எங்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதை தங்களுக்கு மிகுந்த கவலையோடு சுட்டிக் காட்டுகிறேன். இவ்வாறு மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!