Home செய்திகள் கேரள மாநில குப்பைத் தொட்டியாக மாறி வரும் ராதாபுரம் பகுதி;நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்..

கேரள மாநில குப்பைத் தொட்டியாக மாறி வரும் ராதாபுரம் பகுதி;நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்..

by mohan

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட இருக்கன்துறை, செட்டிகுளம், நக்கனேரி, கூடங்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி இறைச்சி கழிவுகள் சாக்கு மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதுமட்டுமல்லாமல் ஏராளமான நோய்கள் உருவாவதற்கு காரணமாகிறது. தினசரி கேரள மாநிலங்களில் இருந்து கோழி கழிவு, மாட்டு இறைச்சி கழிவு போன்ற மாமிச கழிவுகள் மீன் வாகனங்களில் ஏற்றப்பட்டு மீன் கொண்டு வருவது போல் கொண்டு வரப்பட்டு ராதாபுரம் பகுதிகளில் கொட்டப்படுவது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறி வருகிறது. நேற்று இரவு இதைப்போல் கேரளா பதிவு எண் கொண்ட மீன் கொண்டு செல்லும் லாரியில் சுமார் 3 டன் அளவிலான கோழி மற்றும் மாமிசக் கழிவுகள் கொண்டு வரப்பட்டது. அந்த வாகனம் ஆனது மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால் செட்டிகுளம் விலக்கு அருகே வரும் போது வாகனத்தின் பின்பகுதி உடைந்து அதில் இருந்த கழிவுகள் ரோட்டில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி தொடங்கியது. மேலும் வாகனத்தை கொண்டு செல்ல முடியாத தால் வாகனத்தின் ஓட்டுனர், வாகனத்தை அங்கே நிறுத்தினார். தகவல் அறிந்து அங்கு வந்த லெவிஞ்சிபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வாகனத்திற்கு ரூபாய் 5000 அபராதம் மட்டுமே விதித்தனர். கடந்த ஆண்டும் இதே போல் 2 வாகனங்களை கூடங்குளம் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் இரண்டுக்கும் சுகாதாரத்துறையினர் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்தனர். இருப்பினும் அந்த வாகனத்தின் உரிமையாளர் ஒரு லட்ச ரூபாய் கட்ட முடியாது என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் ரூபாய் 10,000 குறைக்கப்பட்டு அந்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டது. இதனால் காவல் துறையினரும், சுகாதாரத்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கினால் காவல் துறையினரும், சுகாதாரத் துறையினர் கடுமையாக பாதிப்புக்கும், மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளை தடுப்பதற்கு தமிழகத்தில் போதுமான கடுமையான சட்டமும் இல்லை, அபராதம் மட்டுமே விதிக்க முடியும். ஆகையால், சுதந்திரமாக இது போன்ற கழிவுகளை கேரளாவில் இருந்து, இந்த பகுதிகளுக்கு கொண்டு வருகின்றனர் என பொது மக்கள் கூறுகின்றனர்.தற்போதும் இந்த வாகனத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சிறிய அபராத தொகையை கட்டி விட்டு அந்த கழிவுகளை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அப்படியே கொட்டி விட்டு வாகனத்தை மட்டும் அந்த ஓட்டுநர் எடுத்துச் செல்வதாகவும்,இது போன்று தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதும் டெங்கு போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாகவும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை தடுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com