“இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழில் இயற்றப்பட வேண்டும்”; நெல்லையில் கவிஞர் பேரா பேச்சு…

நெல்லையில் நடைபெற்ற உலக தாய்மொழி தின விழாவில் “இறவாத புகழுடைய புதிய நூல்கள் தமிழில் இயற்றப்பட வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி கவிஞர் பேரா பேசினார். பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் வைத்து உலகத் தாய்மொழித் திருநாள் விழா நடந்தது. விழாவில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா வரவேற்புரை வழங்கி பேசுகையில் “2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதிகைத் தமிழ்ச் சங்கம் மாதந்தோறும் தமிழ்க் கூட்டங்களை நடத்தியும், பல போட்டிகளை நடத்தியும் பரிசுகளை வழங்கி வருகிறது. “இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழில் இயற்றப்பட வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் ஆணைக்கிணங்க புதிய புதிய நூல்களை எழுத தூண்டுகோலாக இருந்து வருகிறது. முதல் படைப்பாளிகளைக் கண்டுபிடித்து அவர்களைக் கொண்டாடியும் வருகிறது. அந்த வகையில் தான் முதல் படைப்பாளிகளின் நூல்களுக்கான போட்டி நடத்தி ழகரம் வெளியீட்டோடு இணைந்து பணப்பரிசும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கி வருகிறது. இப்போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் “என்று குறிப்பிட்டார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் கென்னடி வேதநாதன் தலைமை தாங்கினார். அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தொடக்கவுரையாற்றினார். கல்லூரி செயலாளர் தினேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகத் தமிழ்க் கவிதை நூல் போட்டியில் முதல் படைப்பாளிகள் பிரிவில் சிறந்த நூலாக தேர்வான “இறகின் வெளி: என்ற நூலின் ஆசிரியர் கூடலூரைச் சேர்ந்த கு.நிருபன் குமார் என்பவருக்கு ரூபாய் ஐந்தாயிரம் பணப்பரிசும், பாராட்டுச் சான்றிதழும் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில் முதல் பரிசுக்கான நூலாக தேர்வான “நீயே முளைப்பாய்”என்ற நூலாசிரியர் இராஜ பாளையத்தைச் சேர்ந்த கவிதா ஜவஹர் என்பவருக்கு ரூபாய் பத்தாயிரம் பணப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ழகரம் வெளியீடு சார்பில் வழங்கப் பட்டது. இரண்டாம் பரிசுக்கு தேர்வான “எமக்கும் தொழில் “என்ற நூலாசிரியர் கோவையைச் சேர்ந்த அன்புத்தோழி ஜெயஸ்ரீ என்பவருக்கு ரூபாய் ஐந்தாயிரம் பணப்பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. பரிசுகள் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை,மற்றும் ழகரம் வெளியீடு இணைந்து மொத்தம் ரூபாய் இருபத்தைந்தாயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் “இளைய தலைமுறையினருக்கு தமிழைக் கொண்டு சேர்க்கும் பணிகளையே பொதிகைத் தமிழ்ச் சங்கமும், ழகரம் வெளியீடும் இணைந்து செய்துவருகிறது. தாய்மொழித் தமிழின் சிறப்புகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழில் பேசுவதையே வாழ்க்கையாகக் கொள்ளவேண்டும். தமிழ் நூல்களை வாசித்து, படைப்பாளிகளாக உருவாகணும். இந்த வயது எல்லாமே வசப்படும் வயதாகும். நிறைய எழுதுங்கள். வார்த்தைகளும்,வாழ்க்கையும் வசப்படும் “எனக்குறிப்பிட்டார். தொடர்ந்து பரிசு பெற்ற நூலாசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். கவிஞர் சுப்பையா நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் கலந்து மாணவ மாணவிகள்,தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்