நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு; கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.தமிழகத்தில் மத மோதலைத் தூண்டும் நோக்கில் பேசி வரும் பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜமாஅத்துல் உலமா சபையின் (இஸ்லாமிய அறிஞர்கள் சபை) சார்பில் காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த வகையில் தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கல்யாணராமன் மீது கடுமையான தண்டனை வழங்கும் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி மாவட்ட எஸ்.பி சுகுணா சிங் இடம் மனு அளிக்கப்பட்டது. அதே போன்று நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் சார்பில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்கெடுக்கும் விதத்திலும், அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும், நாங்கள் எங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் முஹம்மது நபி ஸல் அவர்களை மிகவும் கேவலமாகவும் கேலியாகவும் பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மேட்டுப் பாளையத்தில் பேசியுள்ளார். தொடர்ந்து பல இடங்களிலும் அவதூறாக பேசிவரும் பாஜக பிரமுகர் கல்யாண ராமனை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், வருங்காலத்தில் இதுபோன்ற தீய நிகழ்வுகள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நிகழாமல் தடுக்குமாறும் தமிழக அரசையும் காவல் துறையையும் தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்