Home செய்திகள் நெல்லையில் பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதி விழா;”சொல் பாரதி சொல்” நூல் வெளியீடு..

நெல்லையில் பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதி விழா;”சொல் பாரதி சொல்” நூல் வெளியீடு..

by mohan

நெல்லை பொதிகைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா மற்றும் “சொல் பாரதி சொல்” தமிழ் கவிதை நூல் வெளியீட்டு விழா பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது. விழாவில் செம்மொழியாம் தமிழ்வழியில் கற்றோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவிஞர் சுப்பையா தமிழ்த் தாய் வாழ்த்து பாடி விழாவை துவக்கினார்.

பொதிகைத் தமிழ் அறக்கட்டளை வெளியீடான “சொல் பாரதி சொல் ” என்ற கவிதை தொகுப்பு நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கா. பிச்சுமணி வெளியிட, முதல் பிரதியை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ம.சு.பல்கலைகழக துணைவேந்தர் விழாவில் பேசியதாவது: “பாரதியின் முன்னோர் திருநெல்வேலி சீவலப்பேரியில் வாழ்ந்தவர்கள், அவர் திருமணம் செய்தது கடையத்தில் வாழ்ந்த செல்லம்மா பாரதியைத்தான். காலம் கடந்து பாரதி கண்ட பல கனவுகள் இன்று நிறைவேறி வருகின்றன. பாரதி பெயரில் எட்டயபுரத்தில் நம் பல்கலைக்கழகம் நூலகம் நடத்திக் கொண்டிருக்கிறது. பாரதி எழுதிய நூல்களையும் பாரதியைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களையும் ஆவணப்படுத்தும் நோக்கில் திட்ட முன்வரைவு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவுக்கு அனுப்பியுள்ளோம். பாரதி படைப்புகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்வதற்காக பாரதி ஆய்வறிக்கை ஏற்படுத்தப்படுகிறது. பாரதியின் பார்வை தேசியப் பார்வை, பாரதி ஓர் யுகபுருஷன். காலம் கடந்து கனவு கண்டவன் பாரதி, அன்னிபெசன்ட் அம்மையார் குறித்து பாரதி எழுதிய விமர்சன கதைக்காக 500 பிரதிகள் நூலை வாங்கியவர்கள், தாம் எழுதிய பிற இலக்கியங்களை அவ்வாறு செய்யவில்லையே என்ற வருத்தம்” என்றார். தொடர்ந்து தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதாளர் பாவரசு பாரதி சுகுமாரன் தொடக்கவுரையாற்றினார். விழாவில் பாரதி சுகுமாரன் பேசியதாவது: மகாகவி பாரதியின் புகழைப் போற்றும் வகையில், பாரதியின் புகழைப் பரப்பி வரும் பாரதி பற்றாளர்களுக்கு அரசின் உயரிய இலக்கிய விருதாக மகாகவி பாரதியார் விருதை ஆண்டுதோறும் வழங்கி பாரதியை உலகறியச் செய்து வருகிறது தமிழக அரசு. இதே போல் மொழி நலனுக்காக உழைத்த அறிஞர் பெருமக்களின் பெயரில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி சமகால இலக்கிய வாதிகளையும் கொண்டாடி வருகிறது நமது மாநில அரசு, யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று பிரகடனம் செய்தவன் பாரதி, செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று தமிழின் சிறப்பை உரைத்தவன் பாரதி, தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று தமிழறிஞர்களுக்கு அறிவுறுத்தியவன் பாரதி, எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே என்று தமிழ்மொழிக்கு வாழ்த்துரைத்த பாரதியின் எண்ணத்தை நிறைவேற்றிடும் வகையில், தமிழ்மொழி வழியில் கல்வி கற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் பணியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் அரசு ஏற்று சட்ட வடிவம் கொடுத்துள்ளது, இனி தமிழ்மொழி வழியில் கல்வி பயின்றவர்களுக்கு இருபது சதவிகிதம் அரசுப்பணிகளில் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவு மொழி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தாய்மொழிவழிக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கிடப் போகிறது, தேசத்தில் எந்தவொரு மாநிலத்திலும் தாய்மொழி நாளுக்கு சட்ட வடிவம் கொண்டுவராத நிலையில், மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் தான் தாய்மொழி நாளினைக் கொண்டாடுவதற்கு ஆணை பிறப்பித்து மொழிநலனில் இந்த அரசு முன்னிற்பதை உறுதி செய்தார். அவரை போன்றே செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடியார் அவர்களும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், மாண்புமிகு பாண்டியராஜன் அவர்களும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நோக்கத்துடன் மொழி வளர்ச்சிக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் தீட்டி அதற்கு செயல் வடிவமும் கொடுத்து வருகின்றனர். உலகத்தில் இன்று 6500 மொழிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் அவற்றில் 1800 மொழிகள் விரைவில் தனது அடையாளத்தை இழக்கப்போகிறது என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலகம் தோன்றிய காலத்திய மொழிகளாக கூறப்படும் ஏழு மொழிகளில் இன்று மூன்று மொழிகள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறது, அந்த மூன்று மொழிகளில் நம்முடைய தமிழ்மொழியும் ஒன்று என்பதில் ஒட்டு மொத்த தமிழினமும் பெருமை கொள்கிறது. இந்த நிலையில் உலக மொழிகளில் 14 ஆவது இடத்தில் இருக்கும் தமிழ்மொழியை 10 ஆவது இடத்திற்கு எடுத்து வரவேண்டும் என்ற முனைப்போடு இன்று நமது அரசும், தமிழ் வளர்ச்சித்துறையும் வேகமாக செயல்பட்டு வருகிறது, உலகெங்கும் 94 நாடுகளில் பேசும் மொழியாக அறியப்பட்டுள்ள தமிழ்மொழியை மேலும் பரவலாக்கிடும் பணியாக உலகெங்கும் தமிழ்வளர் மையம், உலக மொழிகளில் எல்லாம் திருக்குறள் மொழியாக்கம், அரபு மொழியில் பாரதிதாசனின் பாடல்கள் மொழியாக்கம் என்று தமிழ்மொழி உலகெங்கும் இன்று சென்று கொண்டிருக்கிறது, கவிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் புரட்சிக் கவிஞரின் பிறந்த நாளினை கவிஞர்கள் தினமாக அறிவித்து தமிழ் மொழிக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் பெருமை சேர்த்தவர் மறைந்த முதல்வர் அம்மா அவர்கள். அவருடைய ஆட்சியைத் தொடர்ந்து நடத்தி மொழி நலனிலும், தமிழர்களின் வாழ்வின் நலனிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களும் தமிழகத்தில் பிறந்து உலகமகாகவியாக அறியப்பட்டு, விடுதலைத்தீயை வளர்த்த, தேசபக்தியும் தெய்வ பக்தியும் கொண்ட பாரதியின் படைப்புகளையும் உலகமொழிகளில் மொழிபெயர்த்திட வேண்டும். பாரதி வாழ்ந்த காலக்கட்டத்தில் விடுதலை மட்டுமே நம்முடைய நோக்கமாக இருந்தது, அதற்குரிய பணியினை மேற்கொண்டவன் பாரதி, பாரதியின் பாடல்களே தேச விடுதலைக்கு பெரும் பங்காற்றியது என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது என்று பாவரசு.பாரதிசுகுமாரன் தனது உரையில் குறிப்பிட்டார். எழுத்தாளர் நாறும்பூநாதன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியர் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் சௌந்தரமகாதேவன், எழுத்தாளர் நவீனா,வழக்கறிஞர் பிரபாகர், திருக்குறள் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தொடர்ந்து சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக் கலைப்புல முதன்மையர் பேராசிரியர் செளந்தர மகாதேவன் பேசியதாவது: இந்தியாவின் தொன்மையான இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி பாத்திரத்தைக் காலத்திற்கு ஏற்ப நவீனமாக மாற்றி சுதந்திர தாகத்தை உருவாக்கும் பாத்திரமாக மாற்றிப் படைத்தார். பாரதியின் பதின் பருவம் சூறாவளிகள் நிறைந்ததாக மாறியது. ஐந்து வயதில் தாயை இழந்து 15 வயதில் திருமணம் செய்து 16 வயதில் தந்தையை இழந்து படிக்க பணமில்லாமல் எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு கல்வியுதவி வேண்டி சீட்டுக் கவி அனுப்பியது யாவுமே அவர் வாழ்வில் திருப்பத்தை உண்டாக்கியது. அவர் படைத்த வரிகள் அவர் பெற்ற வலியில் உருவானவை. 1893 – 1898 வரை பாரதி திருநெல்வேலி இந்து கலாசாலையில் பயின்றபோது வகுப்பில் நிறைய விவாதங்களை மேற்கொண்டதும் சமகால நிகழ்வுகளைச் சரியாக உள்வாங்கியதும் திருப்புமுனைகளாக அமைந்தன. அவையே அவருக்குப் பின்னாளில் மன உறுதியைத் தந்தன. 1898 ஆகஸ்ட் 28 ல் தாய் தந்தை அற்ற நிலையில் எட்டயபுர வீட்டை ரூ 200 க்கு அடமானம் வைத்து பாரதி உயர்கல்வி பயின்றார். காசி இந்து சர்வ கலாசாலையில் வறுமையிலும் செம்மையாகப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பல மொழிகள் கற்றார். துணிச்சலோடு தன் எதிர்கால வாழ்வைத் தேசவிடுதலைக்குத் தந்தார். எந்தச் சிக்கல் வாழ்வில் வந்தாலும் குன்றென உயர்ந்து நில் என்பதே பாரதி உணர்த்தும் பாடம் என்றார். தொடர்ந்து நடைபெற்ற கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்ச்சியில்,”தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் முன்னுரிமை வழங்கிடும் வகையில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி,தமிழர் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி, மொழி வளர்ச்சிக்கும், தமிழ் மொழி கல்விக்கும் அடிகோலியுள்ள தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்ற தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, பொதிகைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் விஜயா கிப்ட்சன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய் நாதன், நல்லாசிரியர் வை. ராமசாமி, வைகுண்டமணி, கலையாசிரியர் சொர்ணம், ஆவின் கோ. கணேசன்,வைதேகி, வளர்மதி அசன்,பாப்பாக்குடி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com