கடையநல்லூரில் போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனை பாலம் கட்டுமானப்பணி நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை அருகே ஏற்கனவே இருந்த பாலத்தை அகலப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. பாலத்தின் இருபுறமும் தற்போது பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அந்த பகுதியை கடந்து செல்ல காத்திருக்கும் நிலை உள்ளது.மேலும் பாப்பான்கால்வாய் ஓடையில் நகராட்சி பகுதிக்கு வினியோகம் செய்யும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணை்ப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் தெற்கே இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் பகுதி, மெயின் பஜார், மாவடிக்கால் ஆகிய பகுதிகள் வழியே ரயில் நிலையம் ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை கிருஷ்ணாபுரம் பிரதான சாலை வழியாக ஒரு வழிப் பாதையை காவல்துறை நடைமுறைப் படுத்த வேண்டும், போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும் நகரமாகவும், போக்குவரத்து நெரிசல் இல்லா நகரமாகவும் கடையநல்லூர் நகரம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..