Home செய்திகள் தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ராஜாங்கம் மறைவு…

தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ராஜாங்கம் மறைவு…

by mohan

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜாங்கம் காலமானார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தொழிற்சங்க தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் 21.7.20 அன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நெட்டூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மதுரையில் கூட்டுறவு தொழிலாளிகளை திரட்டியதில் இருந்து அவரது அரசியல் பணி துவங்கியது. 1972 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட மேற்கு பிராந்திய கமிட்டியில் இணைந்து செயல்பட துவங்கினார். 1970களில் பீடித் தொழிலாளர் சங்கம் துவக்கப்பட்டது. அதன் தலைவராக பாலவிநாயகமும், செயலாளராக ராஜாங்கமும் செயல்பட்டனர். மிகவும் பின் தங்கிய, பிற்போக்குத்தனம் நிறைந்த நெல்லை மாவட்ட கிராமப்புற பீடித் தொழிலாளர்களை கிராமம் கிராமமாக சென்று அணி திரட்டினார். கிராமப்புற ஆதிக்க சக்திகளை எதிர்த்தும் இதனை செய்திட வேண்டி இருந்தது. 1993 களில் கணேஷ் பீடிக் கம்பெனி பீடித் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு போராட்டத்தில் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் தோழர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. செய்யது பீடிக் கம்பெனியின் நிதி நிறுவன மோசடிக்கு எதிராக பத்து நாட்கள் உண்ணாவிரத போராட்டம் தோழர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது.

பீடித்தொழிலாளர்களை சுரண்டலில் இருந்து மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பீடிசுற்றும் பெண்கள் சட்ட உரிமைகள் பெற்றனர். நெல்லையில் இபிஎஃப் அலுவலகமும், சேமநிதி மண்டல அலுவலகமும் துவக்கப்பட்டது. லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது.பீடிசங்கம் மட்டுமல்லாது கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை, போக்குவரத்து, அமைப்புசாரா தொழிற்சங்க இயக்கத்தை கட்டியவர். செங்கோட்டை பிரானூர் பார்டர் மரம் அறுப்பு தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியவர். எமர்ஜென்சி யின் போது கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1991 பாரத் பந்த் போராட்டத்தின் போது காவல்துறையின் கொடும் தாக்குதலுக்கு ஆளானார். 1998 ல் ஜப்பானில் நடைபெற்ற செனட்ரோண் யூனியன் உலக அணு ஆயுத எதிர்ப்பு மாநாட்டில் சிஐடியூ சார்பாக பங்கேற்று தமிழக மக்களின் கோரிக்கைகளை முன் எடுத்து பேசியது குறிப்பிடதக்கதாகும். 2001ல் அக்டோபரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிட்டு ஆலங்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று நெல்லை மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக வாதாடியவர், போராடியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக மாவட்டக்குழு உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றியவர். சிஐடியு மாவட்ட செயலாளராக, தலைவராக, மாநில நிர்வாகியாக நீண்ட காலம் செயல்பட்டவர். தொழிற்சங்க இயக்கத்தில் பல ஊழியர்களை உருவாக்கியவர். தோழர் ராஜாங்கம் துணைவியார் பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு மகாலெட்சுமி என்ற மகளும், பாலசுப்பிரமணியம், வரதராஜன் என்று இரு மகன்களும் உள்ளனர்.மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு சார்பாக அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம். தோழர் ராஜாங்கம் அவர்களுக்கு நெல்லை தென்காசி மாவட்டக்குழு செவ்வணக்கம் செலுத்துகிறது. கட்சிக் கொடிகளை மூன்று நாட்களுக்கு அரைகம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!