பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மோடி அரசை கண்டித்தும் நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து (ஜூன் 29) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே கரோனா தொற்று பரவலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை வதைப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களை மேலும் துன்பப்படுத்தும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது :இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, நிதி மந்திரியாக சிதம்பரம் இருந்தார்.

அப்போது சோனியா காந்தி ஆலோசனை பேரில் ஒரு கொள்கை வகுக்கப்பட்டது. அது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும் போது அதன் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய கம்பெனிகள் ஏற்றிக் கொள்ளலாம். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துக் கொள்ளலாம் என்பது தான்.காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 106 டாலராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை தற்போதைய விலையை விட குறைவாக இருந்தது. ஆனால் தற்போது 16 டாலராக விலை குறைந்த பிறகும், பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. கொரோனாவால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் விலைவாசி உயரும். பொருளாதாரத்தை பாதிக்கச் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.இதை பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்க ராகுல் காந்தி உத்தரவுப்படி நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். சாத்தான்குளம் வியாபாரிகள் 2 பேரை போலீசார் தாக்கி கொலை செய்திருப்பது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும். இதில் அவர் காலம் தாழ்த்த கோர்ட்டு நடவடிக்கைகளை காரணம் காட்டுகிறார்.சாத்தான்குளம் நிகழ்வு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு சரியாக செயல்படாததால் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..