நீட் தேர்வு – இன்னொரு பார்வை – இஸ்லாமியா பள்ளி தாளாளர் கருத்து..

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டே நீட் (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST – NEET) எனும் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பல மாநிலங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடம் நடத்தப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசு நீட் தேர்வை தமிழகத்தில் தடை செய்யும் விதமாக சிறப்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இதன் மூலம் 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இந்த வருடமும் நடைபெறும்.

இதற்கு அரசு தரப்பில் சொல்லப்படும் பதில் இந்த நீட் தேர்வு முறையினால் கிராமப் புற மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள் நகரத்தில் படித்த மாணவர்களுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கும் என்பதாகும். ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கம் என்பது போல் இந்த முடிவும் இரண்டு தரப்பட்ட வகையில் பார்க்கப்படுகிறது.

முதலில் அரசாங்கம் கூறுவது போல் கிராமத்து மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் அரசாங்கமே கிராமத்து மக்கள் படிப்பில் பின் தங்கியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்கிறதா? அவ்வாறு பின் தங்கியிருந்தால் அதற்கு காரணம் யார்? அரசாங்கம் தானே?? நகரத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனால் ஜெயிக்க முடியும் பொழுது எல்லா வசதிகளும் படைத்த அரசாங்க பள்ளிகள் அந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காதது அரசாங்கத்தின் குறைபாடுதான்.

அதே போல் 12ம் வகுப்பு மதிப்பெண்ணை மட்டும் வைத்து மருத்துவக் கல்லூரி படிப்புக்கு அனுமதியளிக்ககும் பொழுது இந்த பிரிவின் மீது முழுமையான ஈடுபாடு இல்லாதவர்களும் மருத்துவ துறைக்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் 12ம் வகுப்புக்கு பின் நுழைவுத் தேர்வு வைக்கும் பட்சத்தில் இந்தப் பிரிவில் ஆர்வம் உள்ளவர்களே முழுமையாக படித்து தேர்வாகுவதற்கு வாய்ப்புள்ளது என்ற கருத்தும் உள்ளது.

இந்த நீட் தேர்வு சம்பந்தமாக கீழக்கரை இஸ்லாமிய பள்ளியின் தாளாளர் முகைதீன் இபுராஹிம் இந்தப் பிரச்சினைக்கு சிந்திக்க கூடிய வேறொரு பார்வையில் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது :- “நீட் தேர்வு தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ நுழைவு தேர்வு எழுத தடை விதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்திருப்பது, தமிழக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தாலும், இந்த சட்டத்தினால் உற்சாகம் அடைந்திருப்பது மருத்துவ கல்லூரி மாபியாக்களே! மருத்துவ கல்லூரி நடத்திவரும் பாதிக்கு மேற்பட்டவர்கள் அரசியல்வாதிகளே ஆவர்! கடந்தாண்டு நுழைவு தேர்வு முறையில் அட்மிஷன் நடைபெற்றதால் வருவாய் இழந்த இந்த வியாபாரிகள் சுதாரித்துக் கொண்டு தங்களது காரியங்களை கச்சிதமாக முடித்து விட்டனர்!

மாணவர்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ள அரசியல் கட்சிகளால் இருக்குமேயானால், மருத்துவ கல்லூரி நிர்வாகம் பெற்றோர்களிடத்தில் இருந்து பிடுங்கும் நன்கொடை மற்றும் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த உரிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

சிந்திக்க வைக்க கூடிய …குரல் அரசு சிந்திக்குமா???