Home செய்திகள் தமிழக மாணவர்களின் உயிரை பறிக்கும் பலிபீடமான நீட்டிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்!எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அழைப்பு!

தமிழக மாணவர்களின் உயிரை பறிக்கும் பலிபீடமான நீட்டிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்!எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அழைப்பு!

by Askar

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் உயிரை பறிக்கும் பலிபீடமாக மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஆண்டுதோறும் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ச்சியாகி வருவதோடு அதிகரித்தும் வருகின்றன. மதுரையில் நேற்று இரவு மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது இன்னுயிரை மாய்த்துள்ளார்.

தனது தற்கொலைக்கு நீட் குறித்த பயமும், தனது மற்றும் தனது பெற்றோரின் மருத்துவக் கனவு நீட் தேர்வால் தடைபட்டு போகுமோ என்ற அச்சமும் மாணவியை தற்கொலைக்கு தள்ளியுள்ளது என்பது மாணவி எழுதி வைத்த கடிதம் மற்றும் அவர் பேசிய ஆடியோ மூலம் உறுதியாக தெரிகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் தனது மற்றும் தனது பெற்றோரின் மருத்துவர் கனவிற்காக கடந்த ஆண்டு தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நீட் தேர்வெழுதி அந்த தேர்வில் மாணவி துர்கா தேர்ச்சிபெறவில்லை. இருப்பினும் தனது மருத்துவக் கல்வி கனவிற்காக மீண்டும் இந்த ஆண்டும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த நிலையில் தான் மாணவி துர்கா தற்கொலை செய்துகொண்டுள்ளார். தன்னால் இந்த ஆண்டும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனால் அது தனது மற்றும் தனது பெற்றோரின் கனவுகளை அழித்துவிடுமே என்ற மன உளைச்சலில், “நான் சோர்வடைந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்,” என்று எழுதிவைத்து விட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மாணவி துர்காவின் இந்த வார்த்தைக்கு நிச்சயம் மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

நீட் தேர்வால் உயிரிழந்த ஏழைச்சிறுமி அனிதாவின் மரணம் தொடங்கி பிரதீபா, சுபஶ்ரீ, சீனிவாசன், கிருஷ்ணசாமி, ரித்து, வைஷியா என நீண்ட நீட் படுகொலைகள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் நீட்டின் பெயரால் நிகழ்ந்த மரணங்கள் ஏற்படுத்தும் காயங்கள் வடுவாக இருக்கின்றன. ஒவ்வொரு மரணத்தின் போதும் இதுவே நீட்டின் பெயரால் நடைபெறுகின்ற கடைசி மரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரம் மற்றும் மாநில அரசின் கையாளாகத் தனத்தால் உடைந்து நொறுங்கி போய்விடுகிறது. நீட்டின் பெயரால் இதுவரை 15 மாணவர்களின் இன்னுயிர்கள் பலிகடாவாக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதத்தில் மாணவி சுபஸ்ரீ, மாணவர் விக்ணேஷ் மற்றும் மாணவி துர்கா என மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன. உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக மத்திய அரசால் திணிக்கப்படும் நீட் தேர்வு, தமிழகத்தில் உயிர்பலி வாங்கும் பலிபீடமாக மாறி வருகிறது.

ஏழ்மை, மன உளைச்சல், அச்சம், நீட் தேர்வை எதிர்கொள்ள இயலாத மாறுபட்ட பாடத்திட்டங்கள், சமமான கற்றல் வாய்ப்புகள் இல்லாதது, பொருளாதார வாய்ப்புகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்கள் நீட்டின் பெயரால் நிகழ்ந்த படுகொலைகளின் பின்னால் அமைந்திருக்கும் காரணங்களாகும்.

நீட்டின் மூலம் தரம் என்ற பெயரில், உயர் கட்டணங்கள் வழியாக தனிப் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி வசதிபடைத்த ஒரு சாரார் மருத்துவ கல்லூரிகளில் நுழைவதும், வசதியற்ற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில தகுதி அற்றவர்கள் என துரத்தியடிக்கப்படுவதும் தான் நீட்டின் நோக்கமாக உள்ளது என்பதை நடக்கின்ற நிகழ்வுகள் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு கல்வித் தீண்டாமையாகும்.

தமிழக மாணவர்களின் இந்த மரணம் தற்கொலை அல்ல, நீட் எனும் பயங்கரவாத அரக்கனால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனப் படுகொலை. இந்த படுகொலைக்கு தமிழக விரோத மத்திய பாஜக அரசும், தமிழக உரிமையை தக்கவைக்க முடியாத மாநில அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தற்கொலை முடிவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஆரோக்கியமான முடிவல்ல என்றாலும், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் தற்கொலைக்கான காரணிகளை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. அரசு மற்றும் நீதித்துறைக்கு அழுத்தம் தரவல்லது மக்கள் புரட்சி என்பதை கருத்தில்கொண்டு, இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு, சமூக நீதிக்கொள்கைக்கெதிராக பேசுவோரை புறந்தள்ளிவிட்டு, ஜனநாயக வழியிலான ஒரு பெரும் போராட்டத்திற்கு மாணவர்களும், மக்களும் தங்களை தயார் செய்துகொள்ள முன்வரவேண்டும். ஏழை-எளிய மாணவர்களை உயர்கல்வியை விட்டும் ஒதுக்கி வைக்கும் சமூக நீதிக்கு எதிரான நீட் எனும் கொடுங்கரத்தை துரத்த அனைத்து தரப்பு மக்களும் வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே தமிழக மாணவர்களின் உயிர் பலிகளை தடுத்து நிறுத்த முடியும். நீட்டுக்கு எதிரான ஒத்தக் கருத்துடைய அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் தங்களுக்கிடையிலான மனமாச்சர்யங்களை களைந்து ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம்
ஒருங்கிணைப்பாளர்
SDPI கட்சி, தமிழ்நாடு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!