நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு – உறுதி செய்தது நாசாவின் சோபியா தொலைநோக்கி.

ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று பலர் கூறியதை நாம் அறிந்தோம். ஆனால் தற்பொழுது, நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் நிலவில் மனிதர்கள் வாழ இயலுமா? எனும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் சோபியா அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கி, நிலவின் சூர்ய ஒளி மேற்பரப்பில் நீர் இருப்பதை உறுதி செய்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். நிலவின் குளுமையான பகுதிகளை தவிர்த்து அதனுடைய மேற்பரப்பு முழுவதும் நீர் இருக்கலாம் என நம்பும் விஞ்ஞானிகள், நிலவின் பூமியை நோக்கிய பகுதியில் அடுத்தக்கட்ட ஆய்வை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். நிலவில் முன்னர் நம்பப்பட்டதைவிடவும் அதிகமாக நீர் இருக்கலாம் என்ற நம்பிக்கை அவர்களை நிலவு குறித்தான ஆய்வில் மேலும் உற்சாகமடைய செய்திருக்கிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் அனுப்பிய நிலாப்பற்றிய தகவல்கள் மூலம் நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதி செய்துள்ளது. நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்தியா கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவியது. அது நிலவின் மேற்பரப்பு, மலை முகடுகள், மண் போன்றவற்றை படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது. சந்திரயான் அனுப்பிய புகைப்படங்கள், தகவல்களை “நாசா’ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை சந்திரயான் சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.முந்தைய ஆராய்ச்சிகளில் நிலவில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்கள் கண்டறியப்பட்டாலும், அது நீரா அல்லது ஹைட்ராக்ஸைலா எனக் கண்டறிய முடியாமல் இருந்தது. ஆனால், சோஃபியா மூலம் முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் துல்லியமான அலைநீளம் கொண்ட கதிர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டதில், நிலவின் பரப்பில் இருப்பது நீர் மூலக்கூறுகளே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source By: NASA Twitter தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி