முஸ்லிம் தனியார் சட்டம் – சமூக மாற்றத்துக்குத் தயாராவோம் …

முஸ்லிம் தனியார் சட்டம் நம்மை படைத்த இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் சட்டம் எனப் பேசவும் எழுதவும் செய்கின்றோம் . எந்தவொரு சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்தால் விளையக்கூடிய பயன்களும் நற்பெறுகளும் ஏடுகளிலும், தாள்களிலும் மட்டுமே பொறிக்கபட்டிருக்கு மேயானால் அதனை பயனுள்ள சட்டமாக எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அன்றாட நடைமுறை வாழ்வில் அவற்றின் நன்மைகளையும் நற்பேறுகளையும் நுகர்ந்தால் மட்டுமே அதைப் பயனுள்ள சட்டமாக மக்கள் ஏற்றுகொள்வார்கள். எனவே இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்கள்படி வாழ்வை முழுமையாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் நீங்கா கடமையாகும்.

இந்த சட்டங்கள் குறித்து திருக்குர்ஆனில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வணக்க வழிபாடுகள் குறித்துக்கூட குர்ஆனில் அந்த அளவிர்க்கு விரிவாக விளக்கபட்டிருக்க வில்லை. இதிலிருந்து, சமூக குடும்ப நெறிமுறைகளுக்கு ஷரியத்தில் எந்தளவு முக்கியத்துவம் தரபட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம் . இதனை சமூகத்தில் நடைமுறைப் படுத்திக் காட்டினார்கள் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் .

ஆனால் , திருமணம் , விவாகரத்து , வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் இஸ்லாத்திர்க்கு நேர்முரணான திசையில் முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது எவராலும் மறுக்க முடியாத நிதர்சனம். வேதனையான உண்மை என்னவெனில் எளிமையான திருமண வழிமுறை ஆடம்பரமானதாக மாற்றப்பட்டுள்ளது. மணப்பெண்ணுக்கு மணக்கொடை தருவதற்குப் பதிலாக வரதட்சனை வாங்கி , மணம் முடிக்கும் அவலம் வெளிப்படையாக அரங்கேறி வருகிறது .

தம்பதியருக்கு பிரச்சனை எனக் கூறி பள்ளிவாசல் நிர்வாகத்தை அனுகும்போது , இஸ்லாமியச் சட்ட வரைமுறைகளின்படி தீர்ப்பு வழங்காமல் , கட்டப்பஞ்சயத்து செய்யப்படும் நிலை. தலாக் இருமுறைதாம் என விவாகரத்துக்கான வழிமுறைகளை குர்ஆன் தெளிவாக அறிவித்திருந்தும், முத்தலாக் எனும் பெயரில் அவை அணைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன .

இந்த மண்ணில் மகளிருக்கு கண்ணியமும் சொத்துரிமையும் வழங்கியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என முழங்கிக் கொண்டே, அவற்றை பெண்களுக்கு வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? திருமணத்தின் போதே வரதட்சணை வழங்கிவிட்டோம் . அகவே , இப்போது சொத்துரிமை எதும் தரமுடியாது என சகோதரிகளை விரட்டியடிக்கும் பாசக்கார சகோதரர்களைத்தானே இப்போது பார்க்க முடிகிறது .

எவர் இறைவன் இறக்கியருளிய சட்டங்களின்படி தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் இறைமறுப்பாளர்கள், கொடுமையாளர்கள் என இறைவன் அறிவித்திருக்க , மனம்போன போக்கில் செயல்பட்டால் நாளை மறுமையில் இறைநீதிமன்றத்தில் என்ன பதில் சொல்ல முடியும் ?

இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான செயல்களால் இஸ்லாம் களங்கப்பட்டு நிற்கின்றது. ஷரீஅத்தே ஒரு கேலி பொருளாக மாற்றப்பட்டுள்ளது இதை காரணமாக வைத்து ஊடகங்களும், நீதிமன்றங்களும் , பெண்ணியவாதிகளும், இந்துத்துவவாதிகளும் முஸ்லிம் தனியார் சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர் .

இஸ்லாமிய ஷரீஅத்துதான் முஸ்லிம்களின் அடையாளம், உயிர் மூச்சு. அதனைப் பற்றிப் பிடித்து வாழ்ந்தால் தான் இம்மையில் நிம்மதியை பெற முடியும் மறுமையில் வெற்றி பெற முடியும். இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்களை பிற்றுபற்றுவதை விட்டு நம்மை யாரும் தடுக்கவில்லை. தடுக்கவும் முடியாது ஆனால் முஸ்லிம்கள்தாம் தடைகற்களாக நிற்கின்றனர். மிக விரைவான சிந்தனை மாற்றத்துக்கு சமூகம் தயராக வேண்டியுள்ளது. எங்கள் உயிரே போனாலும் ஷரீயத்தை விட்டு தரமாட்டோம் என முழங்குகின்றார்கள், முதலில் தங்கள் வாழ்வில் செயல்படுத்த முன்வர வேண்டும்.

பிரச்சனைகளைத் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஷரீயத்தின்படி தீர்ப்பளிக்கின்ற ஆலோசனை மையங்களை நிறுவ வேண்டும். மார்க்க அறிஞர்கள், முத்தவல்லிகள், உளவியல் வல்லுநர், வழக்கறிஞர், பெண்கள் இணைந்து சமூகத்தை சரியான திசையில் வழிநடத்திச் செல்லத் தயராக வேண்டும். இது காலத்தின் தேவை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும் .