Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மத்திய அரசு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த பாரபட்சம் காட்டினால் மக்கள் போராட்டம் மூலம் தீர்வு: நவாஸ் கனி எம்பி துணிச்சல் பேட்டி..

மத்திய அரசு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த பாரபட்சம் காட்டினால் மக்கள் போராட்டம் மூலம் தீர்வு: நவாஸ் கனி எம்பி துணிச்சல் பேட்டி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக., தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட கா.நவாஸ் கனி, பாஜக., சார்பில் போட்டியிட்ட தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை 1,44,807 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதன் மூலம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரான நவாஸ் கனி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்கள் பெற்று வருகிறார்.

இந்நிலையில், ராமநாதபுரம் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தற்போது நிலவி வரும் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, திமுக., ஆட்சி காலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்திய காவிரி கூட்டுக்குடி நீர் திட்ட செயல்பாட்டை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். திமுக., அரசு நடைமுறைப்படுத்திய திட்டம் என்பதால் கிடப்பில் போடப்பட்டுள்ள நரிப்பையூர் உவர் நீரை நன்னீராக்கும் திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயல்குடி அருகே குதிரை மொழியில் துவங்கிய உப்பு நீரை நன்னீராக்கும் விரைந்து செயல்படுத்த வேண்டும். மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டுள்ளேன். மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய ரயில்களை அகல ரயில் பாதையில் மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்துவேன். படித்த இளைஞர்களுக்காக புதிய வேலைகளை செயல்படுத்துவேன். மத்திய அரசு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் பாரபட்சமோ அல்லது தமிழகம் புறக்கணிக்கப்பட்டால் மக்களை திரட்டி கூட்டணி கட்சிகள் போராட்டம் மூலம் தீர்வு காணப்படும். தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது இலங்கை கடற்படை தாக்குவதை தடுக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இலங்கை கடற்கரையில் சேதமாகி கிடக்கும் தமிழக படகுகள் இலங்கை அரசிடம் சுமூக பேச்சு வார்த்தை நடத்தி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான பேச்சு வார்த்தைக்கு இலங்கை மீன் துறை அமைச்சர் என்னை அங்கு அழைத்துள்ளார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள், துறை ரீதியான நிதியை பெற்று நிறைவேற்ற அனைத்து துறை அமைச்சர்களையும் சந்தித்து முறையிடுவேன். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக எம்பிக்கள் 37 பேர் இருந்தும், தமிழகத்திற்கு தீமை பயக்கும் மத்திய அரசு திட்டங்களை தடுக்கவில்லை. ஆனால், நாங்கள் (திமுக., கூட்டணி கட்சி) எம்பிக்கள் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒட்டு மொத்தமாக போராடி பெறுவோம்.

தேர்தல் என்பது வேறு. மக்கள் நலன் என்பது வேறு. எனவே, கூட்டணி கட்சி என்ற காழ்ப்புணர்ச்சியை மறந்து, தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்கள் இராமநாதபுரத்தில் செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து பேசுவேன். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுற்றுலா துறை சார்பில் துவங்கவுள்ள படகு சவாரி, மீனவரின் வாழ்வாதாரம் பாதிக்காமல் செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி சுமூக தீர்வு காணப்படும். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பயணிகள் விமான நிலையம் அமைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். உயர் மதிப்பெண்கள் பெற்று பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் கல்வியை தடையின்றி தொடர மதிப்பெண்கள் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தொகுதி முழுக்க . செயல் படுத்துவேன். தகுதியான மாணவர்களிடமிருந்து தற்போது விண்ணப்பம் கோரியுள்ளேன்.

கடல் அட்டை மீதான தடையை நீக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை பிரதமர் மோடி எளிதில் புறக்கணித்து விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகமது, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராம வன்னி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com