மத்திய அரசு நிதி திட்டங்கள் அன்வர் ராஜா எம்.பி., ஆய்வு…

இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. குழுவின் தலைவர், வக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா எம்.பி., தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கே.சி.ஆனிமுத்து, ராஜ்சபா முன்னாள் எம்பி., எம் எஸ். நிறைகுளத்தான் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 2017_2018, 2018-2019 நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இது வரை செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டம், தமிழ்நாடு மாநில  ஊரக வாழ்வாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், பிரதமர் கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களின்  கீழ் பல்வேறு திட்டப் பணிகளுக்கு மேற்கொண்ட செலவினங்கள், நிறைவேற்றிய திட்டப்பணிகள், நிலுவை திட்டப்பணிகள் குறித்து குழுவின் தலைவர் அன்வர்ராஜா ஆய்வு செய்தார்.

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் நிதியாண்டில்  ரூ.73.71 கோடி மதிப்பில் 16,884 வளர்ச்சித திட்டப்பணிகள் துவங்கப்பட்டு 9,923 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 6,961 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 2018-19ஆம் நிதியாண்டில் இதுவரை  ரூ.52.21 கோடி மதிப்பில் 10,695 பணிகள் துவங்கப்பட்டு 2,308 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.119.62 கோடி மதிப்பில் 229.826 கி.மீ., 63 சாலைப்பணிகள் துவங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன. தூய்மைப் பாரத இயக்கம் திட்டத்தின் கீழ்  2017-18ஆம் நிதியாண்டில் மாவட்டத்தில்11 ஊராட்சி ஒன்றியங்களிலும் 48,441 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18  ஆம் நிதியாண்டில் 507 பயனாளிகள் /2018-19 ம் நிதியாண்டில் 497 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

தமிழ்நாடு ஊரக  சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2017-18ஆம் ஆண்டில் ரூ.18.53 கோடி மதிப்பில் 24 சாலை பணிகளுக்கு, 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.16 கோடி மதிப்பில் 51 சாலைப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழுவின தலைவர் அன்வர்ராஜா பேசுகையில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்  கீழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகிக்கும் குழாய்களை சேதப்படுத்துதல், குடிநீரை முறையாக பயன்படுத்துதல், செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து சட்ட விதிகள் படி நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னேற்றத்தில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, மகளிர்  திட்ட இயக்குநர் குருநாதன், இணை இயக்குநர்கள் சுசீலா (வேளாண்மை) முல்லைக் கொடி (மருத்துவ பணிகள்), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரி (காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்) உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.