Home செய்திகள் மீண்டும் அதே தவறை செய்யப்போகிறதா திமுக தலைமை.? 2011சட்டப்பேரவை தேர்தலும் அதன்பின் மமகவின் நிலைப்பாடும் அலசுகிறார், வதிலை ரிஜால்..

மீண்டும் அதே தவறை செய்யப்போகிறதா திமுக தலைமை.? 2011சட்டப்பேரவை தேர்தலும் அதன்பின் மமகவின் நிலைப்பாடும் அலசுகிறார், வதிலை ரிஜால்..

by Askar

மீண்டும் அதே தவறை செய்யப்போகிறதா திமுக தலைமை.? 2011சட்டப்பேரவை தேர்தலும் அதன்பின் மமகவின் நிலைப்பாடும் அலசுகிறார், வதிலை ரிஜால்..

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த மமகவிற்கு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை ஒதுக்கினார். தனிச்சின்னத்தில் போட்டியிட்டு அதில் இரண்டு தொகுதியில் வெற்றிவாகை சூடி, 9,203 வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கத்தில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மமக போட்டியிட்ட மூன்று தொகுதிகளின் மொத்தம் 42.43% விழுக்காடு வாக்குகளை பெற்றோம்.

2011 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 23 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும், பாமக 3 இடங்களையும் பெற்று திமுக கூட்டணி மொத்தம் 31 இடங்களை மட்டுமே வென்று எதிர்கட்சி வாய்ப்பையும் இழந்தது, 41 இடங்களை வென்ற விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

அதன்பின் 2013-ல் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வந்தது, 32 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்ய முடியும், இப்படியான சூழலில் திமுகவின் கூட்டணி கட்சிகளின் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 31 மட்டுமே ஆகவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கூட பெற முடியாத சூழலில் அன்றைய திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மமகவின் இரு எம்.எல்.ஏக்கள் வாக்களித்து திமுகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கிடைக்க உதவினார்கள், அதில் வெற்றி பெற்றவர் தான் மு.க.கனிமொழி அவர்கள் என்பதையும் மறந்தவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன், அன்று முதல் இன்று வரை திமுகவின் கூட்டணியில் தான் தொடர்கிறது மமக.

மக்கள் நலக் கூட்டணியும் – மமகவின் நிலைப்பாடும்:

2015 மற்றும் 2016 காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளுக்கு ஒருமித்த குரலெழுப்ப தேமுதிக, இடதுசாரிகள், விசிக, மதிமுக, தமாக, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சேர்ந்து “மக்கள் நலக் கூட்டணி” என்ற பெயரில் மக்கள் பிரச்சினைகளுக்கு தொடர் ஆர்பாட்டம், போராட்டம் என ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் 2016-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வந்தது, இந்த மக்கள் நலக் கூட்டணியே தேர்தலிலும் தொடர்வோம் என முடிவெடுத்த போது அது தமிழகத்தின் எதிர்கால நலனை பாதிக்கும், வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு வித்திடும் என்ற நோக்கத்தை மையமாக கொண்டு திமுக கூட்டணியிலே மமக இடம் பெற்றுது. 5 தொகுதிகளை பெற்று 4 தொகுதிகளிலே களம் கண்டு வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்த தேர்தலில் அதிமுக 134 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 98 இடங்களை கைப்பற்றியது, இந்த தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு விகிதம் 41 விழுக்காடு, திமுக பெற்ற வாக்கு விகிதம் 40 விழுக்காடு, மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்கு விகிதம் 6.1 விழுக்காடு மொத்ததில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஏன் தோற்றது என்பதற்கான விடை இதில் உள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

2019 மக்களவை தேர்தலும் மமகவின் நிலைப்பாடும்:

2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மமகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என நம்பிக்கையில் இருந்த மமகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது திமுக தலைமை, அடுத்தமுறை உங்களுக்கு தொகுதி ஒதுக்குகிறோம் என்றது திமுகவின் தலைமை. இந்நிலையில் மமகவின் தலைமை தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு திறமையான, வலிமையான, ஆரோக்கியமான முடிவாக, “நம்முடைய குரல் நாடாளுமன்றத்திலே ஒலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நாட்டை நாசமாக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்காக கூட்டணியில் இடமளிக்கா விட்டாலும் பரவாயில்லை என திமுக கூட்டணிக்கு மமக ஆதரவளித்து, 40 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றியது, இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 40-க்கு 39 தொகுதிகளை வென்றது, எந்த எதிர்பார்ப்புகள் இன்றி 40 மக்களவை தொகுதிகளிலும் மமகவினர் களப்பணியாற்றினார்கள் என்பதற்கு தேர்தல் முடிவே பதில் சொல்லியது.

2021 சட்டப்பேரவை தேர்தல்:

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக இருந்த பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளை மமகவிற்கு ஒதுக்கியது திமுக தலைமை, இருந்த போதிலும் சற்றும் தளராமல் களப்பணியாற்றி இரண்டு தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியது மமக.

இச்சூழலில் 2024 மக்களவை தேர்தலில் மமகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் திமுக தலைமை இந்த முறையும் தொகுதிகள் ஒதுக்காமல் மௌனம் சாதிப்பது திமுக கடைபிடித்து வரும் சமூகநீதிக்கு எதிரானதாகவே பார்க்கிறோம்.

மமகவிற்கு மக்களவை தேர்தலில் தொகுதிகள் ஒதுக்குவதை மமகவின் தொண்டர்களையும் தாண்டி ஒட்டுமொத்த சமுதாயமும் எதிர்பார்த்து வரும் நிலையில் திமுக தலைமையின் மௌனம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஏமாற்றுவதாகவே கருதுகிறோம்.

சமூகநீதி என்பது அனைவருக்கும் சம நீதி வழங்குவதே ஆகும், மேடைதோறும் சமூகநீதி கொள்கையை முழங்கி வரும் திமுகவிற்கு இதுபோன்ற தொகுதி பங்கீட்டில் சமூகநீதியை பேண எது தடுக்கிறது? முஸ்லிம் சமுதாயத்தினர் பிரதிநிதித்துவம் பெற கூடாது என ஏதேனும் நெருக்கடிகள் திமுகவிற்கு இருக்கிறதா என்கின்ற கேள்விகளும் எழுகிறது, மேலும் இதுபோன்ற தேர்தல் நேரங்களில் திமுக மௌனம் காப்பது பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் கடந்தகால தேர்தல் முடிவுகள் காட்டியது என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பலத்த தொண்டர் படை வைத்திருக்கும் மமகவிற்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்க தயங்கும் திமுக தலைமை மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எதன் அடிப்படையில் தொகுதிகள் பங்கிடப்பட்டது என்பதையும் விளக்க வேண்டுமென கோருகிறோம், தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களான முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் அம்மையார் ஜெயலலிதா ஆகியோருடன் கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்த மமகவின் தலைமைக்கு தற்போதைய அரசியல் சூழல் ஒன்றும் பெரிதல்ல, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டாலும், தயவுகூர்ந்து கட்சியின் நலனையும் கருத்தில் கொண்டு மார்ச்-13 திருச்சியில் நடைபெறும் தலைமை செயற்குழுவில் மமகவின் தலைமை நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டுமென தொண்டர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

-பீ.எம்.ரிஜால்,
வத்தலக்குண்டு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!