தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களை அரசு மறுபரிசீலனை செய்து பணி நியமனம் செய்ய 2019-ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் கோரிக்கை .

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களை அரசு மறுபரிசீலனை செய்து பணி நியமனம் செய்ய 2019-ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.கொரோனா நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு 6 மாதங்கள் சம்பளம் இன்றி வேலை பார்க்கவும் தயாராக உள்ளதாக அம்மனுவில் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று, 8888 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2020-21-ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்று காலிப்பணியிடம் போக மீதம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது அடிப்படையில் வேலை வழங்கக் கோரி 2019-ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் 12 பேர் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் வ.மகாராணியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அதில், கொரோனா பொது முடக்கம் காரணமாக காவல்துறை தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால், கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சிபெற்று காலிப்பணியிடம் போக மீதம் உள்ள விண்ணப்பதாரர்களை அப்பணியில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் அளித்த மனு வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கரோனா நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்கு சம்பளம் இல்லாமல் பணிபுரியத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.