
மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம், அஸ்திரேலியா ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக “தமிழகக் கிராமியக் கலைகளும் பண்பாடும்” என்ற தலைப்பில் 21 நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று (09/07/2020) காலை 11 மணிக்கு தொடங்கியது. கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி செய்துள்ளனர்.
இந்த கருத்தரங்கில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
21 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் நாசர், திரைப்பட இசை கலைஞர் தேவா, கிராமியக் கலை பேராசிரியர்கள் பலர் உரையாற்ற உள்ளனர். ஜூலை 9-ஆம் தொடங்கும் கருத்தரங்கம் ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுவரை கருத்தரங்கை பார்வையிட அமெரிக்கா ஜெர்மனி சிகாகோ உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1500 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.கருத்தரங்கில் பேசிய தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறும்போது “வருவாய் துறை அமைச்சரிடம் மூன்று முக்கிய கோரிக்கையை தற்போது வைக்கிறேன்.
தமிழ் கிராமிய கலைஞர்கள் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் கலைஞர்கள் உள்ளனர் தற்போது வரை தொழிலாளர் நலச் சங்கத்தின் 37 ஆயிரம் நபர்கள் மட்டுமே பதிவு பெற்றுள்ளனர் வருவாய்த்துறை உதவியுடன் முகாம்கள் அமைத்து மீதமுள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களை தொழிலாளர் நல சங்கத்தில் இணைக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை போல தமிழ்நாடுஅரசு கிராமியக் கலைஞர்களை வைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும் இதனை முதல்வரிடம் கூறி அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.
கிராமியக் கலைஞர்களுக்கு இணையதளத்தில் வகுப்புகள் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் இதன்மூலம் வெளிநாட்டில் வாழும் கலைஞர்களுக்கு வகுப்புகள் எடுக்க உதவியாக இருக்கும்” எனக் கூறினார்.
மேலும் zoom அப்ளிகேஷன் மூலம் இணையதளத்தில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தினால் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிகிறது, எனவே இதற்கு மாற்றாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் புதிய செயலியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.