Home செய்திகள் கொள்கை அளவில் ஒத்த கருத்து திராவிட கட்சிகள் தான் திமுக.,- அதிமுக., அதனால் கூட்டணி வைக்க முடியுமா அன்வர் ராஜா எம்.பி., கேள்வி?..

கொள்கை அளவில் ஒத்த கருத்து திராவிட கட்சிகள் தான் திமுக.,- அதிமுக., அதனால் கூட்டணி வைக்க முடியுமா அன்வர் ராஜா எம்.பி., கேள்வி?..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்பம் ஒன்றிய அதிமுக., சார்பில் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய செயலர் எம்.கே.கே. தங்கமரைக்காயர் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர் ராஜா பேசியதாவது: ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணி மாறிக் கொண்டு தான் வருகிறது. எந்த கட்சியும் யாருடனும் நிலையான கூட்டணி கொண்டிருக்க முடியாது. அண்ணா காலத்தில் இருந்து இன்று வரை அந்த நிலை தொடர்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி என்பது தேர்தல் வெற்றிக்கான தற்கால ஏற்பாடு தான். கொள்கையளவிலான கூட்டணியல்ல. கொள்கை விரோத கூட்டணி என சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமூக நீதி, மொழி பாதுகாப்பு ஆகியவற்றில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒரே கொள்கை. அதனால் திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க முடியுமா? தேர்தலுக்கு முன், பின் என கூட்டணி மாறக் கூடும். தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவின் சூழ்ச்சியை முறியடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சமயோசித வியூகம் அமைத்து இந்த வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடு தான் இக்கூட்டணி. நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா தொடர்பாக விவாதத்தில் அதிமுக கொள்கையை நிலை நாட்ட, தமிழக அரசின் கருத்துகளை எடுத்துரைத்தேன். காஷ்மீரில் பதுங்கிய தீவிரவாத முகாம்கள் மீது ராணுவ படைகள் மூலம் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்திய பிரதமர் மோடியின் துணிகரமான நடவடிக்கையை முதலில் பாராட்டியது அதிமுக தான். சிறந்த ஆளுமை மிக்க தலைவர் மோடி. ராசியான இந்த கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி. அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் இணைந்து போட்டியிட்ட போது தான் சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை பெற்றது. காரில் தேசியக் கொடி பறக்க விட்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துடன் விஜயகாந்த் வலம் வந்தது அதிமுக கூட்டணியால் தான் என்பதை தேமுதிகவினர் நன்கறிவர். சிறுபான்மையினருக்கு என்றும் பாதுகாப்பு கவசமாக இருப்பது அதிமுக மட்டும் தான். இவ்வாறு அவர் பேசினார்.

எம்ஜிஆர் மன்ற செயலர் தவசி, மாநில மீனவரணி செயலர் நீலாங்கரை முனுசாமி,எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றிய செயலர் நாகராஜன், ஒன்றிய மகளிரணி செயலர் சக்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்தாண்டி, ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் எஸ். ரபீக் ராஜா, ஊராட்சி செயலர்கள் கள.ராஜேந்திரன் (என்மனங்கொண்டான்), ஜி.ஜானகி ராமன் (பெருங்குளம்), பி.கே. சந்திரன் (சாத்தக் கோன் வலசை), மண்டபம் பராம்பரிய மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் நம்புவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மரைக்காயர் பட்டணம் ஊராட்சி செயலாளர் எஸ்.ஏ.சுலைமான் நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com