Home செய்திகள் தூத்துக்குடியில் ரூ. 298.5 கோடி மதிப்பிலான முதற்கட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடக்க விழா : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அடிக்கல் நாட்டினார்..

தூத்துக்குடியில் ரூ. 298.5 கோடி மதிப்பிலான முதற்கட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடக்க விழா : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அடிக்கல் நாட்டினார்..

by ஆசிரியர்

தூத்துக்குடியில் ரூ. 300 கோடி மதிப்பிலான முதற்கட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடக்க விழாவினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் ,திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி தலைமையில் இன்று நடைபெற்றது. ,

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் (smart city) இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கத்தோடு, மத்திய அரசு ஜுன் 2015ஆம் ஆண்டு சீர்மிகு திட்டத்தை அறிவித்தது. தமிழகத்திற்கு மாநில அரசு நிதியுடன் இணைந்து 12 ஸ்மார்ட் சிட்டிகள் (smart city) ஒதுக்கியுள்ளது. இதன் திட்ட காலம் 5 ஆண்டுகள் (2015-16 லிருந்து 2020வரை) ஆகும். மத்திய அரசு ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது. அதற்கு இணையாக தமிழக அரசும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி(smart city) திட்டத்துக்கு முதலாவது சுற்றில் (2015-16) பெருநகர சென்னை மற்றும் கோயம்புத்துhர் மாநகராட்சிகளும், 2வது சுற்றில் (2016-17) மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாநகராட்சிகளும், 3ம் சுற்றில் (2017-18) திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஸ்மார்ட் சிட்டிகளில்(smart city), மொத்தம் ரூ.13425.65 கோடி (ரூபாய் பதிமூன்றாயிரத்து நானூற்று இருபத்தைந்து கோடியே அறுபத்தி ஐந்து இலட்சம் மட்டும் ) மதிப்பீட்டில் 173 திட்டங்கள் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.989.87 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் நகர பகுதி சார்ந்த வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மின்சேமிப்பு தெருவிளக்குகள், குடிசைப்பகுதிகளில் புனரமைப்பு செய்தல், உறுதியான தகவல் தொடர்பு மற்றும் பொதுவான கட்டுப்பாட்டு அறை அமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பு பேணுதல், மோட்டார் வாகனம் இல்லாத போக்குவரத்தை ஊக்குவித்தல் மற்றும் பாதசாரிகளுக்கு ஏதுவான நடைபாதை அமைத்தல், கழிவுநீர் பாதுகாப்பான முறையில் அகற்ற பாதாள சாக்கடை திட்டம் முழு அளவில் நிறைவேற்றுதல், மாநகராட்சி பள்ளிகளை சிறப்பான தொழில்நுட்பத்துடன் மிடுக்கான பள்ளிகளாக மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல், மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் எளிதில் வடிய மழைநீர் வடிகால் அமைத்தல், சிறப்பு வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல், 1–வது, 2–வது மற்றும் 3–வது குடிநீர் திட்ட பம்பிங் குழாய்கள் சீரமைத்தல் மற்றும் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி குடிநீர் வினியோகம் கண்காணித்தல் ஆகிய திட்டங்கள் 2017–2022–ம் ஆண்டில் செயல்படுத்த அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது ,இதன் அடிப்படையில் 41 பணிகள் ரூ.989.87 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன

.இதன் துவக்கமாக ரூபாய் 300 கோடி மதிப்பிலான முதற்கட்ட பணிகளுக்கான துவக்க விழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது ,முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்டுதல் (பகுதி 1) ரூ.175.68 கோடி திட்ட மதிப்பீட்டிலும், மழைநீர் வடிகால் கட்டுதல் (பகுதி 2) பணி ரூ.77.36 கோடி திட்ட மதிப்பீட்டிலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ரூ.35.84 கோடி திட்ட மதிப்பீட்டிலும், பூங்காக்கள் அமைக்கும் பணி ரூ.4.06 கோடி மதிப்பீட்டிலும், மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்பு ரூ.1.55 கோடி, மின் ஆற்றல் சேமிப்பு தெரு மின் விளக்குகள் அமைத்தல் ரூ.4 கோடி மதிப்பீட்டிலும் ஆகிய திட்டங்களை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் “துப்புரவு தொழிலாளர்களின் பணியை இலகுவாக்கும் வகையில் அனைத்து மாநகராட்சியிலும் முன்னோடியாக ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்திய தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை பாராட்டுகிறேன். ஸ்மார்ட் சிட்டி பணிகள் ரூ. 999 கோடி மதிப்பில் நடைபெற உள்ளது. அந்த பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும். உடனடியாக அதை துவக்க வேண்டும். காலதாமதம் ஆக கூடாது. துவக்கப்பட்ட மாநகராட்சி பணிகள் சில 2 ஆண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை வேகமாக செயல்படுத்த வேண்டும். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பல பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. பணம் கட்டி 5 ஆண்டுகள் ஆகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படாததால் ராஜகோபால் நகர் உள்ளிட்ட பல பகுதி மக்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். எனவே அந்த பணிகளுக்கு உடனே குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிசை பகுதி மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் உடனே குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்குழாய் அமைத்து தர வேண்டும். சாலைகள் அமைக்கும் போது பழைய சாலையை தோண்டி எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தபடும் போது அங்கு கடை வைத்திருப்பவர்களுக்கே மறுபடி கடைகளை வழங்க வேண்டும்,பூங்காக்கள் அமைத்தால் மட்டும் போதாது. அதற்கான நிதி ஒதுக்கும் போது பராமரிப்பு செலவுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் என பேசினார் ,

கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தூத்துக்குடி அ தி மு க வின் மக்களவை உறுப்பினர் நட்டர்ஜி ,அம்மா ஆட்சிக் காலத்தில் நகரில் உள்ள பேருந்து நிலையத்தை போக்குவரத்து நெரிசல் கருதி மீன்வளத்துறை கல்லூரி அருகில் இடம் ஒதுக்கி அங்கு மாற்றம் செய்ய விரும்பினார் ,ஆதலால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை அங்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறினார் ,

இறுதியாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு தி மு க சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார் ,பின்னர் பேசிய அவர் இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை போன்ற ஆழ்துளை குழிகளில் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தனி மனிதனாக கழிவுகளை அகற்றிடும் நிலையினை மாற்றிடவும் ,பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை நீக்கவும் ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார் ,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு ” ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு 50 சதவீதமும் மாநில அரசு 50 சதவீதமும் பங்களிப்போடு ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதில் முன்னெடுக்கும் பணிகளாக முதல் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி தான் பணிகளை நிறைவேற்றுவதில் முதல் நிலையில் இருக்கிறது , 298 புள்ளி 4 5 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இத்திட்ட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் led screen, சோலார் லைட், கழிவுநீர் திட்டப்பணிகள், என காலத்திற்கேற்றாற்போல் என்னென்ன திட்டங்கள் எல்லாம் தேவையோ அது அத்தனையும் நடைமுறைப்படுத்தப்படும் ,விரைவில் புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் ,பாதாள சாக்கடை இணைப்புக்காக அனைத்து மக்களிடம் இருந்தும் 10 நாட்களுக்குள் அனைத்து மக்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும், அந்த விண்ணப்பங்களை பெற்று அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய கழிவுகளும் பாதாள சாக்கடை இணைப்போடு இணைக்கப்படும் வசதியை மாநகராட்சி முதன்முதலில் நடைமுறைப்படுத்த இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நிறைவுறும் காலகட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக வளரும், இத்திட்டப்பணிகள் நிறைவேறும் காலகட்டத்தில் கல்வி வசதிகள், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும், கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மழை நீர் தேங்குதல் போன்றவைகள் ஏற்படாதவண்ணம் திட்டங்கள் செயல்படுத்தப்படும் , தூத்துக்குடி கடல் மட்டத்தை விட தாழ்வான பகுதியாக இருக்கும் காரணத்தால் எதிர்காலத்தில் கடல் நீர் உட்புகாமல் இருக்க தொலைநோக்கோடு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் ,

மாநகராட்சி அந்தஸ்து பெற்று பத்து வருடங்களாகியும் இன்னும் காவல்துறைக்கு கமிசனர் நியமிக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,”புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் தூத்துக்குடி மட்டுமல்ல திண்டுக்கல் தஞ்சாவூர் அங்கெல்லாம் கூட இன்னும் காவல்துறைக்கு கமிசனர் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள், அனைத்து இடங்களிலும் நியமிக்கப்படும் நேரத்தில் நியமிக்கப்படுவார்கள் , தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அதே இடத்தில் பணிமனையோடு இணைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும், அதற்க்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது, எனவே மக்களுடைய கோரிக்கையை ஏற்று மக்கள் எங்கே அமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்குதான் திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என்றார் , இதன் மூலம் கட்சியின் மக்களவை உறுப்பினர் நட்டர்ஜி வைத்த கோரிக்கையை நிராகரித்தார் , தியாகராஜ் நட்டர்ஜி பேருந்து நிலையத்தை மீன்வளத்துறை கல்லூரி அருகில் கொண்டு செல்ல நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி தொகுதி எம்பி தியாகராஜ் நட்டர்ஜி, சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், பயிற்சி ஆட்சியர் அனு, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னத்துரை, மாவட்ட, மீனவ கூட்டுறவு இனைய தலைவர் பி.சேவியர், மாநகராட்சி செயற்பொறியாளர், ரூபன் சுரேஷ் பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!