உத்தரகோசமங்கை அருகே பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் உத்தரகோசமங்கை அருகே வடக்கு மல்லல் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோழி அபிவிருத்தி திட்டம் 2018 – 2019 கீழ் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு விலையில்லா  அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமை வகித்தார். 66 பயனாளிகளுக்கு தலா 50 அசீல் நாட்டுக் கோழி குஞ்சுகளை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் வழங்கினார். அவர் பேசியதாவது: தமிழக முதல்வரால் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரால் 2018 ஜூலை 9 அன்று தமிழக சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட கிராமப்புற ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் பொருட்டு 77 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 50 கோடி மதிப்பீட்டில் விலையில்லா  அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 2,200 பயனாளிகளுக்கு தலா 50 நாட்டு கோழி குஞ்சுகள் வீதம் வழங்க குறியீடு நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டம் ரூ 1. 40 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதன் முதற்கட்டமாக திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மல்லல் ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 66 பயனாளிகளுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வடக்கு, தெற்கு மல்லல் கிராமத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைத்து கொடுத்துள்ளேன். அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அதிமுக., தயாராக உள்ளது. கடந்தாண்டு நான் எழுதிக் கொடுத்த கோரிக்கையை ஏற்று, ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை என்னிடத்தில் கொடுத்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர்கள் முத்துச்சாமி, சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணா துரை, கால்நடை உதவி மருத்துவர்கள் திருச்செல்வி (உத்தரகோசமங்கை), சாரதா (தொருவளூர்) உட்பட பலர் பங்கேற்றனர்.