நாடாளுமன்ற தேர்தல் – கருத்துகணிப்புகளை பொய்யாக்கி இந்த முறையும் அதிமுக தான் அதிக இடங்களை கைப்பற்றும் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ..

விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்ப சுவாமிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நினைவுத்தூண் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கலந்துகொண்டு நல்லப்ப சுவாமிகளுக்கு நினைவுத்தூண் அமைக்க அடிக்கல் நாட்டினார். கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட அதிமுக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அப்படியே பிரதிபலிக்கும் என்பது எந்த காலத்தில் நடந்துள்ளது. சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 27 தொகுதிகள் அதிமுக வெற்றி பெறும் என எந்த கருத்து கணிப்பிலும் வரவில்லை. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக அதிமுக தன்னந்தனியாக போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தக் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்யாக்கி அதிமுக தான் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றது என்ற வரலாற்றை இந்த முறையும் உருவாக்குவோம். கோடநாடு விவகாரத்தில் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நேரத்தில் ஜாமினில் வெளியே விட்டார்கள். அதோடு முதலமைச்சர் நின்றுவிடாமல் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபா மான நஷ்ட வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்டு மேற்கொண்டு அது தொடர்பாக பேசக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர் நீதிமன்றம் அந்த வழக்கை ஏற்றுக் கொண்டு கோடநாடு சம்பந்தமாக ஊடகத்தில் பேட்டி எதுவும் தரக்கூடாது என தடை விதித்துள்ளது. இதில் முதல்வருக்கு துளிகூட சம்பந்தம் இல்லை என நிரூபித்துள்ளார். மேலாக சொன்னால் அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதையும் பேசுவார்கள். இன்றைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் விவரம் இல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார். நீதிமன்றம் நேற்று ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் அவர்கள் கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நாங்கள் நீதிக்கு தலைவணங்க பழக்கப்பட்டவர்கள். எம்ஜிஆர் நீதிக்கு தலைவணங்கு என்ற படத்தில் நடித்தார். திமுக தலைவர் நீதிக்கு தண்டனை என்ற படத்தை தயாரித்தவர். அந்த வழியிலேயே அவரது மகனும் செல்கிறார். அரசு ஊழியர் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிச்சயமாக அரசு ஏற்றுக்கொள்ளும். அதற்குரிய பேச்சுவார்த்தைக்கான பணிகளை அரசு செய்து வருகிறது, என்றார் அவர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி