சண்டிகர் மருத்துவக் கல்லூரியில் இராமேஸ்வரம் மாணவர் தற்கொலை..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி இவர் ராமநாதசுவாமி கோவிலில் புரோகிதராக இருந்து வருகிறார் இவரது மூத்த மகன் கிருஷ்ண பிரசாத் . இவர் உயர் ந நிலை கல்வியை இராமேஸ்வரத்திலும் ராசிபுரத்தில் மேல்நிலை கல்வியை முடித்தார். +2 தேர்வில் நல்ல மதிப்பென் எடுத்ததை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரரான கிருஷ்ண பிரசாத், கடந்தாண்டு நவம்பரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான(PGIMER) பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்-ல் தேர்வு எழுதி வெற்றி பெற்ற கிருஷ்ண பிரசாத் M.D General medicine துறையில் சேர்ந்தார். ஜனவரி 24-ல் சண்டிகரில் அப்பா ராமசாமி அம்மா புவனேஸ்வரி சண்டிகர் சென்று மகனின் பிறந்த நாளில் வாழ்த்து கூறிவிட்டு வந்தனர். இந்நிலையில் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. என்ன நடந்தது என்பது குறித்து அதே கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் தமிழ் மாணவர் ஒருவரை தொடர்புகொண்டு பேசினோம்.

“கிருஷ்ண பிரசாத் கடந்தாண்டு நவம்பரில் இங்கு சேர்ந்தார். அவரின் தந்தை என்னை சந்தித்து கல்லூரி குறித்து விசாரித்தார். கல்லூரியில் சேர்ந்து 10 நாள்களில் `எனக்கு மன உளைச்சலா இருக்கு. இந்தி தெரியல. என்னால் இங்கு படிப்பைத் தொடர முடியுமான்னு தெரியல’ என்று பிரசாத் என்னிடம் கலங்கினார். நானும் தைரியம் கொடுத்தேன். ஆனால், அவர் மறுநாளே ஊருக்குப்போவதாகச் சொல்லி விமான நிலையம் புறப்பட்டார். நானும் என் நண்பர்கள் சிலரும் அவருக்குத் தைரியம் கொடுத்து விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு அழைத்து வந்தோம். அதன்பிறகு அவர் கவுன்சலிங் மூலம் வேறு பிரிவுக்கு மாறிவிட்டார்.

பிரசாத் தனி விடுதி அறைக்குச் சென்றுவிட்டதால், அவரை சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. இன்று காலை பிரசாத்தை நான்கு நாள்களாகக் காணவில்லை என்று தகவல் பரவியது. இதையடுத்து பிரசாத்தின் துறைப் பேராசிரியர்கள் அவரின் விடுதி அறையை உடைத்துப் பார்த்தனர். பிரசாத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரின் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இங்கு படிக்கும் தமிழ் மாணவர்கள் அனைவருக்குமே மன அழுத்தம் அதிகம்தான். முதுநிலை மருத்துவம் பயில்வதால் பேராசிரியர்களுடனும் மற்ற மாணவர்களுடனும் கலந்துரையாடுவது அவசியம். ஆனால் வட மாநிலங்களில் படிக்கும் எங்களை போன்ற தமிழக மாணவர்களுக்கு மொழி எப்போதுமே தடையாக இருக்கிறது. எங்களுக்கு இந்தி தெரியாது என்ற ஒரே காரணத்தால் இங்கு பிழைப்பது ரொம்பவே கடினமாக உள்ளது. நான் பிரசாத்தைக் கடைசியாகப் பார்த்தபோது அவர் சொன்னதும் இதைத்தான். பிரசாத்துக்கு என்ன நடந்தது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது’’ என்றார்.

கிருஷ்ண பிரசாத்தின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நண்பர்களும், உறவினர்களும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் மர்மமாக உயிரிழப்பது குறிப்பாக மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது மாணவர்களையும், பெற்றோர்களையும் பீதியடைய செய்துள்ளது மேலும் வருங்கால மாணவர்களுக்கு மன உளைச்சளை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இறந்த மருத்துவ மாணவர் கிருஷ்ணா பிரசாத்தின் உடல் கூறு ஆய்வு சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையில் நடைபெற்று முடிவடைந்தது. மருத்துவ அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் உறவினர்களிடம் வழங்கப்டவுள்ளது. மேலும் இன்று விமானம் கிடைக்காததால் நாளை காலை 8மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு 12.30 மணியளவில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இராமேஸ்வரம் கொண்டு வரவுள்ளதாக கிருஷ்ணா பிரசாத்தின் உறவினர் தெரிவித்துள்ளனர்.