Home செய்திகள் அப்துல்கலாம் கனவை நினைவாக்க துடிக்கும் இளைஞர்கள் .

அப்துல்கலாம் கனவை நினைவாக்க துடிக்கும் இளைஞர்கள் .

by mohan

மரம் நடுவதற்கு ஆகவே விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று காய்கறிகளை வாங்கி வந்து பொதுமக்களிடம் விற்று அசத்துகின்றனர் மதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள். படிப்பிற்கும் செய்கின்ற தொழிலுக்கும் சம்பந்தமில்லையென்றாலும், இதில் மனப்பூர்வ திருப்தி ஏற்படுவதாக பெருமை கொள்கின்றனர்.மதுரை-தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நாகமலைப் புதுக்கோட்டை. இப்பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் தமிழ் வனம் என அமைப்பை ஏற்படுத்திய சுபாஷ், முத்துமணி, இசாக் அகமது மற்றும் அருண்குமார் ஆகியோர் ஒருங்கிணைந்து காய்கறி விற்பனையில் இறங்கியுள்ளனர்.செக்காணு£ரணி, திருமங்கலம் ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, நாகமலை, ஆலம்பட்டி, ராஜம்பாடி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று நேரடியாகவும், என்ஜிஜிஓ காலனி பகுதியில் சாலையோர கடை அமைத்தும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.கணினி மென்பொருள் துறையில் பொறியியல் பயின்றுள்ள சுபாஷ் கூறுகையில், திரைப்படத்துறைதான் என்னுடைய ஆசை. அதற்காக முயற்சி மேற்கொள்ளும் அதேநேரத்தில் இயற்கையான, பசுமையான உணவு முறையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ‘மீனாட்சி பசுங்காய்கனி அங்காடி’ என்ற பெயரில் காய்கறி விற்பனையைத் தொடங்கினோம்’ என்கிறார்.மக்களுக்கு சந்தை விலையைவிடக் குறைவாகவும், தரமானதாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளிடமே நாள்தோறும் நேரடியாகச் சென்று வாங்கி வருகிறார்கள் இந்த இளைஞர்கள். தற்போது இந்த முயற்சியைத் தொடங்கி சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், பொதுமக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது என்கின்றனர்.எம்.காம் (சி.ஏ) படித்துள்ள அருண்குமார் கூறுகையில், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் நிறைய நேரங்களில் வீணாகும் நிலை ஏற்படுகிறது. அந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்கின்ற காரணத்தால், மக்களுக்கு நியாயமான விலையில் தர முடிகிறது’ என்கிறார்.தக்காளி, உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், முட்டைக்கோஸ், முருங்கை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன், அந்தந்த பருவத்தில் கிடைக்கும் கொய்யா, மாம்பழம், நெல்லி உள்ளிட்ட கனிகளையும் விற்பனை செய்கின்றனர். தங்களது வாடிக்கையாளர்கள் தொலைபேசி வழியாக அழைத்து கூறுவனவற்றை குறித்துக் கொண்டு அடுத்த நொடி வீட்டிற்கே சென்று வழங்கிவிட்டு வருகின்றனர். இதற்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்துள்ள முத்துமணி கூறுகையில், கரோனா ஊரடங்கின்போது காய்கறிகள் கடுமையான விலையேற்றம் கண்டது. ஆகையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது உதயமானதுதான் இந்த விற்பனை குறித்த சிந்தனை. எங்களின் இந்த முயற்சிக்கு திருமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி அன்னவயல் காளிமுத்து, முழுவதும் வழிகாட்டினார். நாங்கள் விற்பனை செய்கின்ற காய்கறிகள் அனைத்தும் இயற்கை முறையில் விளைந்தவையாகும். இதன் காரணமாக காய்கறிகளை பொதுமக்களுக்கு மிகத் தரமான முறையில் வழங்குகிறோம்’ என்கிறார்.இந்த இளைஞர்கள் ‘தமிழ் வனம்’ என்ற அமைப்பின் மூலமாக மரக்கன்றுகள் நடுகின்ற பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். நாகமலையிலிருந்து ஆண்டிப்பட்டி வரை என வரையறை செய்து, கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பணியையும் இடைவிடாது மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இளங்கலை வணிகவியலில் முதலாமாண்டு பயிலும் இசாக் அகமது கூறுகையில், அப்துல் கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றுவதே எங்களது அமைப்பின் நோக்கமாகும் மரக்கன்று நடுகின்ற பணியுடன், கூடுதலாக பொதுமக்களின் நேரடி பயன்பாட்டிற்காகவும் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும், காய்கறி விற்பனையை தொடங்கியுள்ளோம். படித்துவிட்டு சும்மா இருப்பதைவிட, சமூகத்திற்கு பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்’ என்கிறார்.எதிர்காலத்தில் இந்த விற்பனையை மேலும் விரிவுபடுத்துவதுடன், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்கின்றனர். மேலும் குறைந்த விலையில் கீரை வகைகளை வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது மேலக்குயில்குடி அருகே அரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இந்த இளைஞர்படை அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்வது பொருத்தமான ஒன்றாகும். தகுந்த வழிகாட்டுதலும், தூண்டுதலும் இருந்தால் இளைஞர்கள் எத்தகையவற்றையும் சாத்தியமாக்குவார்கள் என்பதற்கு இவர்களைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!