
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று அந்த நிறுவனத்தின் வேலையில் சேர சாதி மற்றும் சாதி உட்பிரிவு விபரங்களை கோரியுள்ளதாக வெளியாகியுள்ள விண்ணப்ப படிவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.மதுரை மாவட்டம் மேலூர் சாலையில் உத்தங்குடி அருகே அமைந்துள்ளது தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்க்க விவரங்கள் சமர்ப்பிக்க கோரும் விண்ணப்ப படிவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அக்குறிப்பிட்ட விண்ணப்பத்தில் பெயர் கல்வித்தகுதி வயது முகவரி பணி அனுபவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களோடு மதத்துடன் சாதியையும் சாதியின் உட்பிரிவையும் குறிப்பிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்குறிப்பிட்ட விண்ணப்ப படிவம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியானதுடன் வைரலாகியும் வருகிறது.இது சம்பந்தமாக மருத்துவமனையின் உயர் அலுவலர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது எங்கள் நிறுவனத்தின் விண்ணப்ப படிவம் தான். அரசாங்கத்திற்கு தரவேண்டிய விவரங்களின் அடிப்படையில் சாதி குறித்து நாங்கள் கேட்டிருக்கிறோம். மற்றபடி இதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்றார். இட ஒதுக்கீட்டுக்காக இதுபோன்ற கேள்விகளை உங்களது விண்ணப்பத்தில் இணைத்துள்ளீர்களா இன்று நாம் கேட்ட கேள்விக்கு, ஆமாம் அந்த அடிப்படையில்தான் இந்த விவரங்களை நாங்கள் கோருகிறோம். ஆனால் தனிப்பட்ட எங்களது அலுவல் சார்ந்த இந்த விபரம் எப்படி வெளியானது என்று தெரியவில்லை? என்றார்.பொதுவாக அரசு இது போன்ற சாதி விபரங்களை கேட்கும் பொழுது பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., என்று மட்டுமே தகவல் இடம் பெறும். ஆனால் நேரடியாக சாதி மற்றும் சாதி உட்பிரிவு குறித்து இந்த நிறுவனம் கேட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.