ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறு மணி நேரம் சோதனை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் தென்காசி மாவட்டம் இடைகால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சில நேரங்களில் இடைகால் சார்பதிவாளர் விடுமுறையில் செல்லும் போது ராஜேந்திரன் பொறுப்பு சார் பதிவாளர் ஆக இருந்து பத்திரப்பதிவு செய்து வந்தார். அவர் பொறுப்பு சார்பதிவாளர் ஆக இருக்கும்போது பத்திரப்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் ராஜேந்திரனுக்கு சொந்தமான வீட்டில் பெண் காவல் ஆய்வாளர் பாரதிபிரியா தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் போதுமான ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கிடைத்த ஆவணங்களை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் பிற்பகலில் சோதனையும் முடித்து சென்றனர். முன்னதாக லஞ்ச ஒழிப்பு துறை இன்று ராஜேந்திரன் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் நேற்று இரவே ராஜேந்திரன் வெளியூர் சென்று விட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே பத்திரப்பதிவு துறையில் அதிக அளவில் லஞ்சம் ஊழல் நிறைந்து இருப்பதால் கடந்த வாரம் முழுவதும் பல பத்திரப்பதிவு அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வந்தநிலையில் தற்போது சார்பதிவாளர் அலுவலரின் வீட்டில் நடைபெற்ற சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்