Home செய்திகள் வைகை அணை தண்ணீர் மதுரையை கடந்து ராமநாதபுரம் நோக்கி பாய்ந்து சென்றது:

வைகை அணை தண்ணீர் மதுரையை கடந்து ராமநாதபுரம் நோக்கி பாய்ந்து சென்றது:

by mohan

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தொடர் மழை மற்றும் கூடுதல் நீர்வரத்து காரணமாக 67 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து, கடந்த 4-ம் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக விநாடிக்கு 900 கன அடி வீதம் பாசனக் கால்வாய் வழியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.அணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோதும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்துகொண்டே வந்தது.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 5 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக 69 கன அடி என மொத்தம் 3,969 கன அடி நீர் திறக்கப்பட்டது.அணையின் சிறிய மதகுகள் வழியாகத் திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப் பாய்ந்து வெளியேறியதால் வைகை அணையின் இரு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.இந்த நீரினால், ஆற்றின் வழிநெடுகிலும் உள்ள உறை கிணறுகளில் நீர் ஊற்று ஏற்பட்டு ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் நிலை உள்ளது.காவல்துறையினர் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வைகை ஆற்றின் இருபுறமும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வைகை ஆற்றின் இருபுறமும் ஆகாய தாமரை செடிகள் பெருமளவு படர்ந்து காணப்படுவதால் அணை நீர் தங்கு தடையின்றி செல்வதற்கு வசதியாக மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com