Home செய்திகள் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் சு. வெங்கடேசன் எம் பி.யின் வேண்டுகோள்:

மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் சு. வெங்கடேசன் எம் பி.யின் வேண்டுகோள்:

by mohan

கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில் என்னுடைய வேண்டுகோளினைச் சமர்ப்பிக்கிறேன்.நமது மாவட்டத்தில் நோய்த்தொற்றின் வேகம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நோயப்பரவலின் வேகம் கடந்த வாரம் 6.34%ஆக இருந்தது இந்தவாரம் 7.17%ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களின் தினசரி எண்ணிக்கை 500யைக் கடந்துகொண்டிருக்கிறது. இந்த வேகத்தைக் கட்டுப்படுத்தப்படவில்லையென்றால் அடுத்த வாரம் நமது மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காதநிலை உருவாகும். அந்தநிலை உருவாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைத்து வகையிலும் தீவிரப்படுத்த வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முகாம் தற்போது 240ஆக இருப்பதை உடனடியாக 400ஆக உயர்த்த வேண்டும். தற்போது முகாம்களின் மூலம் நாள்தோறும் பரிசோதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 15000 ஆக இருப்பதை 25000 ஆக உயர்த்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த வேலையை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். இதனைச் செய்வதன் மூலமே நோய்ப்பரவலின் வேகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அடர்த்தி கொண்டநகரம் மதுரை என்பதனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படவில்லையென்றால் நிலைமை மிகவேகமாகக் கைமீறும்.முதல் அலையின் போது இதேபோன்ற நிலை உருவான நேரத்தில் காய்சல் கண்டறியும் முகாம்களை உடனடியாக இரு மடங்கு அதிகப்படுத்தியது நமக்கு பெரும்பலனைத் தந்தது.பொதுவான தன்மையில் காய்ச்சல் முகாம்களை நடத்தாமல்நோய்த்தொற்று அதிகமிருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து நடத்துவது நமக்கு நல்ல பலனைத்தரும்.தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது பெருந்தீர்வைத் தரும். ஆனால் அது மாவட்ட நிர்வாகத்தின் கையில் மட்டும் இல்லை. மேலே இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளை விரயமில்லாமல் உடனுக்குடன் மக்களுக்கு வழங்க வேண்டும்.பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை நூறு சதம் உறுதிப்படுத்த வேண்டும். தேவையில்லாமல் கூட்டங்கூடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். வரும் வாரம் மிகமிக முக்கியமான ஒன்றாகும். நோய்ப்பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தப் போகிறோமா அல்லது நோயின் தீவிரத்தாக்குதலுக்குள் சிக்கிக்கொள்ளப் போகிறோமா என்பதை அடுத்து வரும் நாள்களில் நம்முடைய செயல்பாடுகளே தீர்மானிக்கும்.மாநில நிர்வாகம் அரசியல் தலைமையற்று இருக்கும் ஒரு சூழலில் பொருந்தொற்றினை எதிர்கொண்டிருக்கிறோம். இந்தநிலை முன்னெப்போதும் இல்லாதது. தேர்தல் வழிகாட்டு விதிமுறைகள் இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளால் நிலைமையை முழுமையாக ஆய்வுசெய்யவும் தலையீடுசெய்யவும் முடியாதநிலை நிலவுகிறது.அதேநேரம் நமது அரசுப் பணியாளர்கள் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மீண்டும் பெருஞ்சவாலான பணிக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த ஓராண்டுகாலம் தொடர்ந்து சவாலான பணியினை சந்தித்துக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நாம் துணைநிற்ப்போம்.இந்த கடுமையானசூழலில் நம்மையும் சமூகத்தையும் பெருந்தொற்றிலிருந்து காக்க முழுமையான விழிப்புணர்வோடு செயல்படவேண்டும்.நம்முடைய பொறுப்புணர்ச்சியும் கூட்டுச்செயல்பாடுந்தான் நம்மைக்காக்கும்.இவ்வாறு சு.வெங்கடேசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!