
மதுரை: ஊராட்சிகள் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுப் பணிகளுக்குத் தர வேண்டும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத் தலைவர் அமிர்தவள்ளி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “ஜனநாயக முறைப்படி நான், ஒன்றியத் தலைவராகச் செயல்பட மாவட்ட ஆட்சியர், பிடிஓ உள்ளிட்டோர் அனுமதிப்பதில்லை. பெரும் இடையூறு செய்கின்றனர். ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.
2019-20ஆம் ஆண்டில் நடந்துமுடிந்த தெற்கு சேர்பட்டி சாலைப் புதுப்பித்தல் பணிக்கு ரூ.25 லட்சமும், காராம்பட்டி சாலை பலப்படுத்தல் பணிக்கு ரூ.29 லட்சமும் வழங்கிட போதிய நிதி இல்லாததால் தாய் திட்ட சேமிப்பிலிருந்து கடனாக வழங்குவதாகவும், இந்தப் பணத்தை மணப்பாறை ஒன்றியப் பொதுநிதியில் வரவுவைத்து, பின்னர் மாவட்ட ஆட்சியரின் பெயருக்கு வங்கி வரைவோலையாக அனுப்ப வேண்டும் என்றும் கூறி மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு நிதியை மாற்ற அதிகாரம் இல்லை. இதற்கான பணத்தை மாநில நிதிக்குழு பொது நிதியிலிருந்து கொடுத்தால் ஒன்றிய நிர்வாகம் முடங்கும் அபாயம் ஏற்படும். அலுவலர்களின் இந்த நடவடிக்கை ஊராட்சி ஒன்றியப் பணிகளை முடக்கும் வகையில் உள்ளது. எனவே, நிதியை வேறு பணிக்குப் பயன்படுத்தும் இணை இயக்குநரின் உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும். சட்டவிரோதம் என்பதால் அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இணை இயக்குநரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து, மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி இணை இயக்குநர், மணப்பாறை பிடிஓ ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.