மதுரை நகரில் சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் கோரிக்கை மனு

மதுரை நகர் பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் பதிகக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்காக பெரும்பாலான சாலைகள் மற்றும் தெருக்களில் தோண்டப்பட்டு மேலோட்டமாக மூடப்பட்டு உள்ளது.இதனால் சாலைகளில் ஏற்பட்ட மேடுபள்ளங்களால் நடந்து செல்வோர் முதல் வாகனங்களில் செல்லும் மக்கள் வரை அனைவரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.குறிப்பிட்ட பகுதிகளில் ஒவ்வொரு தெருவாக முழுமையாக பணிகளை முடித்து தார் சாலை அமைத்த பின் அடுத்தடுத்த தெருக்களில் பணிகளை மேற்கொண்டால் மக்களுக்கு சிரமம் இன்றி இருந்திருக்கும்.மேலும் நகரில் உள்ள பாலங்களின் பக்கவாட்டில் மரங்கள் முளைத்து, தூண்களும் சுவர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.எனவே தற்போது மக்கள் நலன் கருதி அனைத்து இடங்களிலும் தரமான தார் சாலைகள் அமைத்து பாலங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விரைவில் ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உயர்திரு.அன்பழகன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளேன்.இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அவர்களை நான் சென்ற நேரம் சந்திக்க முடியாததால் எனது கோரிக்கை மனுவை பதிவுத் தபால் மூலம் அவருக்கு அனுப்பி உள்ளேன்.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் இந்த கோரிக்கை மனுவை பதிவுத் தபால் மூலம் அனுப்பி உள்ளேன்.எனது மனுவில் மேலும் கூறியதாவது:1. மதுரை நகர் பகுதியில் அனேக சாலைகள் மற்றும் பல தெருக்கள் பல்வேறு திட்டப் பணிகளுக்காக பல மாதங்களுக்கு முன்னரே தோண்டப்பட்ட நிலையில் அவை உடனுக்குடன் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.மேலும் தொடர்ந்து மேடுபள்ளங்களில் பயனிக்கும் மக்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்பு, தூசிகள் பரவுவதால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்படுகிறது.2. சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கழிவுநீர் மூடிகள் பல இடங்களில் சாலையைவிட உயரமாகவோ அல்லது பள்ளமாகவோ இருப்பதால் விபத்துகள் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.இத்தகைய சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கே இவ்வளவு சிரமங்கள் இருக்கையில் மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்டுவது மிகக் கடினமான நிலையில் உள்ளது.3. சாலை விரிவாக்கம் செய்யும் இடங்களில் இருபுறமும் பழமையான மற்றும் பலன் தரும் மரங்களில் ஒருசில மட்டும் வேரோடு இடமாற்றம் செய்யப்பட்டாலும் பெரும்பாலும் முற்றிலும் வெட்டப்படுகிறது.
இதனால் நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.4. பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட்சிட்டி பணிகள் மேலும் சில காலம் நடைபெறும் என்ற நிலையில் அதனைச் சுற்றி தற்காலிக தார் சாலை அமைத்தால் வாகன ஓட்டிகளின் மிகப்பெரிய சிரமம் குறையும்.5. மதுரையின் முதல் மற்றும் பழமையான ஏ.வி மேம்பாலத்தின் பல தூண்களின் அடிப்பகுதியில் கற்கள் பெயர்ந்து பலமிழந்து உள்ளது. ஆகவே இதில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பதுடன் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.6. மதுரை கல்லூரி அருகில் உள்ள மேம்பாலம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் முற்றிலும் இடித்து மறு கட்டுமானம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.மேலும் இதன் நிலை அறிந்தும் பாலத்தின் அடிப்பகுதியில் செயல்படும் மரக்கடைகள் அகற்றப்பட வேண்டி உள்ளது.7. பலங்காநத்தம், மதுரா கோட்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்து வேர்கள் பரவுவது அந்த பாலங்களின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.ஆகவே மதுரை மாநகர மக்களின் நலன் கருதி தாங்கள் இவற்றை போர்கால அடிப்படையில் சீர் செய்யும் வகையில் சாலைகள், பாலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட குழுக்களை ஏற்படுத்தி உடனடி தீர்வு காண ஆவன செய்யுமாறு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்