ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை காவல் ஆணையர்

மதுரையில் கர்ப்பிணியை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரும்பிய ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்த மாநகர காவல் ஆணையர், போலீசாரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ராமகிருஷ்ணன் என்பவர், இப்போதும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி வருகிறார்.

அண்மையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியில் துடித்துகொண்டிருந்த போது அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கட்டணம் வாங்காமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது மதுரை கோரிப்பாளையம் போக்குவரத்து சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோவை மடக்கி, ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, 500 ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர்.

கர்ப்பிணிக்கு உதவச்சென்ற தன்னிடத்தில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தால், ராமகிருஷ்ணன் மனம் உடைந்து போனார். இந்த சம்பவம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த, வாட்ஸப்பில் வீடியோ ஒன்றை வெளியிட, அது வைரலானது.மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவும், ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோவை பார்த்து, அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, ஆட்டோ ஓட்டுநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய காவல் ஆணையர், போலீசாரின் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். ராமகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் ரத்து செய்தார்.பொதுமக்களிடத்தில் கண்ணியத்துடனும் அன்புடனும் போலீசார் நடந்து கொள்ள வேண்டுமென்று மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..