Home செய்திகள் பெண் சிசுக் கொலையை தடுக்க புதிய செயலி – மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா சிறப்பு பேட்டி

பெண் சிசுக் கொலையை தடுக்க புதிய செயலி – மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா சிறப்பு பேட்டி

by mohan

பெண் சிசுக்கொலை பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தி ‘பாதுகாப்பான மதுரை (Save Madurai)’ என்ற பெயரில் புதிய செயலி ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா ஐபிஎஸ் சிறப்பு பேட்டி.பெண் சிசுக் கொலை மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு ஆனி விஜயா ஐபிஎஸ் இன்று சிறப்பு பேட்டி அளித்தார்.அப்போது அவர் பேசியதாவது,மிக நவீனமான 2020 காலகட்டத்திலும் பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது என்பதைக் கேட்கும்போது இந்திய காவல் பணி அதிகாரியாக குறிப்பாக மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக மிகுந்த வேதனைப்படுகிறேன்.

கடந்த 93 94 ஆம் ஆண்டுகளில் என்னுடைய ஆய்வின் பொருட்டு நான் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் ஒன்று இந்தப் பெண் சிசுக்கொலை. அந்தக் காலகட்டத்தில் நமது தமிழ்நாட்டில் ஆணுக்கும் பெண்ணுக்குமான விகிதாச்சாரம் மிக மிக குறைவாக இருந்தது.அச்சமயத்தில் பெண் சிசுக் கொலையும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டேன். எனக்கு நேரடியான ஆய்வுத் தலைப்பு இல்லை என்றாலும் இதில் எனக்கு ஆர்வம் இருந்தது.

இதற்கு காரணமாக பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு இன்மை என்பது ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது ஆனால் அதை நான் முற்றிலும் மறுக்கிறேன். பெண்களை அதிகார மய பயன்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகள் ஆதிகாலத்திலிருந்தே இருந்து வருகின்றன. ஆகையால் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.ஆனால் ஒரு பெண்ணுக்கு முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் எல்லா நேரத்திலும் எல்லா பெண்களுக்கும் இல்லை என்பதுதான் எனது கருத்து. காரணம் இது ஒரு ஆணாதிக்க சமூக கட்டமைப்பு கொண்டதாகும்.

காலங்காலமாக இருக்கின்ற இந்த கலாச்சார கட்டமைப்பை நான் புறக்கணிக்க விரும்பவில்லை இருந்தாலும் ஒரு பெண்ணின் உணர்வுகளை நான் முழுவதுமாக புரிந்துகொள்ள முன்வரவேண்டும் பெண்கள் எடுக்கின்ற முடிவுகளை மதிப்பவர்கள் ஆகவும் இருக்க வேண்டும். பெண்ணை பெண் குழந்தைகளை வெறும் பொருளாக பார்க்கும் பார்வை மாற வேண்டும்.இன்றைய சூழலில் அனைத்து சமூகங்களிலும் பெண் கிடைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக மாறி விட்டது. ஆனால் அப்படி ஒரு சூழலிலும் கூட பெண் சிசுக்கொலை நடப்பது மிகுந்த வேதனைக்குரியது

இன்றைக்கு எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் மிகப்பெரிய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய சமூக பாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை விசாகா குழுவின் பரிந்துரைகள் அளித்தும் கூட பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு கிட்டவில்லை.அதேபோன்று இளைய தலைமுறைக்கு ஆர்வம் மேலிடுகின்ற ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு நல்ல வழிகாட்டிகள் இல்லை.

ஆனாலும் எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஒரு முழுமையான புரிதல் ஏற்பட்டு சமூகம் சரியான வழியில் செல்லும். ஆண் பெண் இருவரையும் வளர்ப்பதில் சமத்துவமான முறையை பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டுக் குடும்ப வாழ்வியல், அதன் மதிப்பு கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் சொல்லி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

இனிமேல் இதுபோன்ற பெண்சிசுக்கொலை என்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கக்கூடாது. பெண் குழந்தையை வளர்க்க இல்லாவிட்டால் எவ்வளவு நடைமுறைகள் தொட்டில் குழந்தை திட்டம் போன்ற நல்ல பல செயல்பாடுகள் உள்ளன. ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளன. குழந்தை பாக்கியம் இல்லாத எத்தனையோ தம்பதிகள் இருக்கிறார்கள். அதனை பயன்படுத்திக்கொள்ள முன்வருவது தான் ஆரோக்கியமான செயல்’ என்றார்

மேலும் அவர் கூறுகையில், ‘பெண் சிசு கொலை மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமூக நலன் சார்ந்து பல்வேறு செயல்பாடுகளில் தமிழக காவல்துறை தற்போது முனைப்பு காட்டி வருகிறது.

1091 என்ற எண் பெண்களுக்காகவும், 1098 என்ற எண் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி வாட்ஸ்அப் எண்கள் முகநூல் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்பது அவசியமில்லை அறிந்தவர்கள் யாரும் புகார் அளிக்கலாம்.

கடந்து 2019 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி காவல்துறையில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் துறை இயக்குனர் தலைமையில் இந்தப் பிரிவு செயல்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏடிஎஸ்பி டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் இதற்காகவே இயங்கி வருகின்றனர். தற்போது தமிழக காவல் துறையின் மூலமாக இதுபோன்ற வன்முறைகள் ஏன் எதனால் நடைபெறுகிறது என்ற பகுப்பாய்வும் அதே நேரத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான விழிப்புணர்வும் சட்ட பாதுகாப்பும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com