Home செய்திகள் ஆசிரியருக்கு நிவாரணம் வழங்கிய மாணவர்கள்

ஆசிரியருக்கு நிவாரணம் வழங்கிய மாணவர்கள்

by mohan

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது பொட்டுலுப்பட்டி. அங்கு உள்ள காந்திஜி தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.பள்ளிக் கல்வியைத் தாண்டி அறம் சார்ந்த வகுப்புகளை நாடகக்கலையின் வழியாக வழங்கி வரும் செல்வம் என்ற தன்னார்வ ஆசிரியர், குழந்தைகளையே நடிக்க வைத்து அதன்மூலம் அவர்களை உணர வைக்கின்ற உத்தியை கடைப்பிடித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியில் ஒழுக்க போதனை செய்து வருகிறார். இலவசமாகவே அந்தப் பள்ளி மாணவ மாணவியருக்கு தனது ‘நாடகக்கலை வழியாக அறம்’ என்ற சேவையை மனமுவந்து செய்து வருகிறார் ஆசிரியர் செல்வம்.

தற்போதைய கரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இந்த தன்னார்வ ஆசிரியர் குடும்பத்திலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த காந்திஜி தொடக்கப் பள்ளி மாணவ மாணவியர், தங்களது சேமிப்பிலிருந்து திரட்டிய தொகை ரூ.565ஐ தங்களை வழிநடத்திய ஆசிரியர் செல்வத்திற்கு இன்று வழங்கி மகிழ்ந்தனர்.அதுதவிர குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் திரண்டு வந்து தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள் பருப்பு அரிசி உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினர். இதுகுறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு ஆசிரியர் செல்வம் தொலைபேசி வாயிலாக வழங்கிய சிறப்பு நேர்காணலில், ‘இந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னவாக இருக்க வேண்டும் என நான் தீர்மானித்து நாடகக்கலை வழியாக அறத்தை போதித்தேனோ அந்த வெற்றியை நான் கண்ணார கண்டு விட்டேன்.

அவர்கள் வழங்கிய தொகையைக் காட்டிலும் பலகோடி மடங்கு பெரியது அந்த மனது. எதிர்கால தலைமுறை எப்படி ஒரு சமூக புரிதலோடு செதுக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வையே ஒரு சாட்சியாக நான் எடுத்துக் கொள்கிறேன். இது என் பயணத்தில் கிடைத்த மற்றொரு வெற்றி. இதுவரை தமிழகம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை நான் சந்தித்துள்ளேன். தொடர்ந்து பள்ளி குழந்தைகளை நோக்கி நான் செல்வதற்கு மற்றொரு உந்துசக்தியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. ஒரு ஆசிரியனாக உள்ளபடியே பெரிதும் பெருமிதம் கொள்கிறேன் என்றார்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!