Home செய்திகள் வெளி நாடுகளில் தவித்து வரும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு; அழைத்து வர உடனடியாக ஏற்பாடு செய்க:- வைகோ அறிக்கை!

வெளி நாடுகளில் தவித்து வரும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு; அழைத்து வர உடனடியாக ஏற்பாடு செய்க:- வைகோ அறிக்கை!

by Askar

வெளி நாடுகளில் தவித்து வரும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு; அழைத்து வர உடனடியாக ஏற்பாடு செய்க:- வைகோ அறிக்கை!

இந்தியாவில், கேரளத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் இருந்துதான் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், வளைகுடா நாடுகளிலும், அமெரிக்க, ஐரோப்பா,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக நாடு திரும்ப வழி இல்லாமல் தவிக்கின்றார்கள்.

வந்தே பாரத் அறிவிப்பின் கீழ், முதல் கட்டமாக, ஒருசில வான் ஊர்திகள் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்தன. அதிலும், சௌதி அரேபியாவில் இருந்து ஒரு வான் ஊர்தி கூட வரவில்லை.

கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை என்றார்கள். சௌதியில் நிறைய கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர். இதர வளைகுடா நாடுகளில் இருக்கின்ற கர்ப்பிணிப் பெண்களையும் கொண்டு வருவதற்கு, அங்கிருந்து புறப்பட்ட வான் ஊர்திகளில் போதிய இடம் தரவில்லை.

இரண்டாவது கட்டமாக, அரசு அறிவித்து இருக்கின்ற 176 வான் ஊர்திகளில் ஒன்றுகூடத் தமிழ்நாட்டுக்கு இல்லை. முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது-

மலேசியாவில் இருந்து 15 க்கும் மேற்பட்ட வான் ஊர்திகள் இந்தியாவுக்கு வந்து, மலேசியக் குடிமக்களை ஏற்றிச் சென்றன. அங்கிருந்து காலியாக வந்த அந்த வான் ஊர்திகளில், மலேசியாவில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை இலவசமாக அழைத்துச் செல்வதற்கு அவர்கள் ஆயத்தமாக இருந்தபோதிலும், இந்திய அரசு அதற்கு இடம் தரவில்லை.

வான் ஊர்திக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு இருந்த நிலையில், முன்பை விடக் கூடுதல் கட்டணம் வாங்குவதாக வருகின்ற தகவல்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற செயல் ஆகும்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், 3 மாதங்களாக ஈரான் நாட்டில் படகுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதேபோல, சுற்றுலாக் கப்பல்களில் பணிபுரிகின்ற இந்தியர்களும், இரண்டு மாதங்களுக்கு மேல் தரை இறங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வான் ஊர்தி நிலையங்களில் தகுந்த சோதனை ஏற்பாடுகள் செய்ய முடியும். எனவே, அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புவதற்கு ஏற்ற வகையில், கூடுதலாக வான் ஊர்திகளை இயக்க வேண்டும்.

அதேபோல, தொடரித்துறையில் அறிவிக்கப்பட்ட சிறப்புத் தொடரிகளுள், தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு 18 தொடரிகள் புறப்பட்ட நிலையில், வெளியில் இருந்து ஓரிரு தொடரிகள்தான் தமிழ்நாட்டுக்கு வந்தன.

தமிழ்நாட்டில் இலட்சத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், இங்கிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பிற மாநிலங்களுக்குச் செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை -8 15.05.2020

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!