Home செய்திகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், யார் இவர் ஓர் பார்வை..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், யார் இவர் ஓர் பார்வை..

by Askar

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், யார் இவர் ஓர் பார்வை..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான தோழர் ஆர்.சச்சிதானந்தம் (வயது 53) திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். பி.எஸ்.சி. பட்டதாரியாவார். 37 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும், 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.

1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். 1992ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து 1994-2002 வரை மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன்பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்ட செயலாளர், மாநில துணை செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு 1996-2006 வரை இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டு முதல் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரத்ததான கழகத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி இதுவரை 32 முறை இரத்ததானம் செய்துள்ளார். விவசாய சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் பழனி வட்டத்தில் உபரி நில மீட்பு போராட்டத்தை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த நிலத்தை மீட்டு ஏழை விவசாயிகளுக்கு கொடுக்கும் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தியவர்.

கூடலூர், லந்தக்கோட்டை, கருங்கல் கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களிலிருந்து சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கட்சியின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி அத்திட்டத்தை கைவிட செய்து விவசாய விளை நிலங்களை பாதுகாத்தவர். புலையன் இனத்தை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கொடைக்கானல் துவங்கி சென்னை வரை அம்மக்களை திரட்டி போராட்டம் நடத்தியவர்.

ஊராட்சி மன்றத்தில் எவ்வித லஞ்ச, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை நடத்தியவர். கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று கைதாகியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் கிராமம் கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு எஸ்.கவிதா என்ற மனைவியும், ஆர்.எஸ். வைசாலி (திருமணமானவர்), ஆர்.எஸ். மிருணாளினி (பத்தாம் வகுப்பு மாணவி) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!