Home செய்திகள்உலக செய்திகள் நாசாவின் மரைனர்-10 (Mariner-10) விண்கலம் முதன் முதலில் புதன் கோளை நெருக்கிய தினம் இன்று (மார்ச் 29, 1974).

நாசாவின் மரைனர்-10 (Mariner-10) விண்கலம் முதன் முதலில் புதன் கோளை நெருக்கிய தினம் இன்று (மார்ச் 29, 1974).

by mohan

ரோமானியக் கடவுளின் தூதர் மெர்குரி [Mercury, Messenger of God] பெயரைக் கொண்டு முதற்கோள் புதனின் பெயர் மெர்குரி [Mercury] என்று வைக்கப் பட்டது. 17ம் நூற்றாண்டில் பிறை வெள்ளியை [Venus] முதலில் கண்ட இத்தாலிய வானியல் மேதை காலிலியோ, புதனும் அவ்வாறே பிறை வடிவில் இருப்பதைத் தொலை நோக்கியில் பார்த்து, இரண்டும் பரிதியைச் சுற்றி வருகின்றனவா என்று ஆராய்ந்தார். அதை உறுதிப் படுத்த புதன், வெள்ளி ஆகியவற்றின் பிறைகளைத் தொடர்ந்து பதிவு செய்து, பூமியின் நிலவைப் போல் பாதி நகர்ச்சியில் பிறை பெரிதாவதையும், அடுத்த பாதி நகர்ச்சியில் பிறை சிறிதாவதையும் கண்டு பிடித்து, புதன் வெள்ளி இரண்டும் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டினார். சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று கூறிய, கிரேக்க ஞானிகள் அரிஸ்டாடில் [Aristotle] டாலமி [Ptolemy] ஆகியோரின் கொள்கை பிழையான தென்று எடுத்துக் காட்ட, காலிலியோவுக்கு வெள்ளி புதன் ஆகிய கோள்களின் பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் சான்றாய் அமைந்தன.

பூமியிலிருந்து தொலை நோக்கி மூலம் பார்த்தால், சூரிய உதயத்திற்கு ஒன்றை மணி நேரத்திற்குப் முன்பு எழுந்து, சூரிய மறைவுக்கு ஒன்றை மணி நேரத்திற்குப் பின்பு புதன் தெரியாமல் போகிறது. சுக்கிரனும் காலையில் அதுபோல் விடி வெள்ளியாகவும், மாலையில் அந்தி வெள்ளியாகவும் ஒளி வீசுகிறது. காலை நேரத்தில் பரிதிக்குக் கிழக்குக் கோடித் திசையில் [Greatest Eastern Elongation], அடுத்து மாலை நேரத்தில் மேற்குக் கோடித் திசையில் [Greatest Western Elongation] மட்டுமே புதனைக் காண முடியும். அதாவது, புதன் கோளைப் பூமியிலிருந்து 28டிகிரி கோணத்தில் பரிதிக்கு இருபுறமும் காண முடியுமே தவிர, மற்ற வீதி நகர்ச்சியில் அது சூரியனின் பேரொளி வெள்ளத்தில் மூழ்கிப் போகிறது. சுக்கிரனைப் [Venus] போல், புதனுக்கும் துணைக் கோள் எதுவும் இல்லை. சூரிய மண்டலத்தில் மற்ற எல்லாக் கோள்களுக்கும் (பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ) ஒன்று அல்லது மேற்பட்ட துணைக் கோள்கள் உள்ளன. கரடு முரடான துளைகள் நிறைந்த கரும் பாறை களைப் புதன் கொண்டிருப்பதால், அது பரிதியின் ஒளியை எதிரொ ளிக்கும் திறம் மிகவும் குறைந்தது. பூமியைப் போல் பாதுகாப்பு வாயு மண்டலம் எதுவும் புதனில் இல்லாததால், சூரியனின் உக்கிர வெப்பம் முழுவதும் அதன் வரண்ட குழிகளையும், உச்சி மலைகளையும் சுட்டுக் கரிய வைக்கிறது.

நாசா 03, 1973ல் ஏவிய, விண்கலம் மரைனர்-10 சுக்கிரனை (Venus) முதலில் ஆராய்ந்து படமெடுத்து, அடுத்து மார்ச் 29, 1974ல் புதன் கோளை நெருங்கி 197 மைல் அருகே பறந்து ஒரு புறத்தை மட்டும் படமெடுத்தது. நாசா சுக்கிரனின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி, விண் கப்பலின் போக்கைக் கட்டுப் படுத்தி, புதனைக் குறிவைத்தது. அம்முயற்சி வெற்றி அடைந்து, ஆறு மாத இடை வெளிகளில் அடுத்து, அடுத்து மரைனர்-10 மூன்று முறைப் புதனைக் கடந்து, தொடர்ந்து புதுப் புது விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது. மரைனர்-10 புதனின் தளப் பகுதிகளை முதன் முதல் படமெடுத்து அனுப்பவும், எதிர்பாராதவாறு ஒரு பெரும் காந்தக் களத்தைக் கண்டு பிடிக்கவும் ஏதுவானது.

பூமியைப் போல் அடுக்கடுக்கான பல்வேறு அடித்தட்டுகளின்றி, புதன்க்கோள் ஒற்றை அடித்தட்டு கொண்டது. நாசா புதன் கோளைச் சுற்ற முதலில் அனுப்பிய விண்ணுளவி மரைனர்-10 புதன் மேற்தளத்தை 45% அளவே ஆய்வு செய்ய முடிந்தது. முழுப் பரப்பைத் தழுவாது, கணித்த பழைய மதிப்பீடுகள் 3.8 பில்லியன் ஆண்டுகளில் புதனின் ஆரம் 0.5 – 2 மைல் (0.8 -3 கிலோ மீட்டர்) குன்றியது என்று குறிப்பிட்டன. ஆனால் வெப்ப நிலை வரலாற்றின்படி 3 – 6 மைல் (5-10 கிலோ மீட்டர்) ஆரம் குறைந்தது என்பது முன்னுரைக்கப் பட்டது. இப்புதிய விளைவுகள் புதன்க்கோள் பழைய அளவை விட 4.4 மைல் (7 கிலோ மீட்டர்) அளவு மேலாகச் சுருங்கியது என்று காட்டுகின்றன. அதாவது வெப்ப நிலை மாடலை ஒப்ப, தற்போதைய ஆரத்தின் நீளம் : 1516 மைல் (2440 கிலோ மீட்டர்) பால் பைர்ன் குழுவினர் [Paul Byrne & Coauthors] 5934 மேடு, பள்ளங்களை ஆய்ந்து, புதன்க்கோள் 5 முதல் 560 மைல் சுருங்கி விட்டதாகக் கூறுகின்றார். இப்படிச் சுருங்கிப் போகும் புதக்கோளின் திரவ உட்கரு முழுவதும் ஒரு காலத்தில் உறைந்து போய்ச் சுருக்க இயக்கம் முற்றிலும் நிறுத்தமாகும்.

புதன் மண்டலம் காந்த சக்தி கொண்டுள்ளதற்கு, அதன் உட்கருவில் இரும்புக் கோளம் இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. பூமியின் சந்திரனைப் போல் மேல் தளத்தில் பாறைக் குழிகள் நிரம்பி இருந்தாலும், புதன் தனித்துவம் பெற்றுச் சிறிதளவு காந்த சக்தி கொண்டுள்ளது. சந்திரனில் காந்த மண்டலமும் இல்லை. இரும்புள்ள உட்கருவும் இல்லை. புதன் தளத்தில் கோபுரம் போன்ற செங்குத்தான மலைகள், தாழ்ந்த பள்ளங்கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால் பூமியின் சந்திரனில் புதனைப் போல் செங்குத்தான மலைகள் இல்லை. புதன் கோளில் வாயு அழுத்தம் இல்லை. பிராணவாயு, நைடிரஜன் எதுவும் கிடையாது. நீரில்லை, புதனும் பூமியின் நிலவைப் போலவே எந்த வித உயிரினமும் வாழ வழி இல்லாத ஓர் செத்த அண்டமே.

செவ்வாய், சுக்கிரன் கோள்களைப் போல், புதனும் கடும் வெப்பம், குளிர்ச் சூழ்நிலை கொண்டு யாரையும் வரவேற்காத வரண்ட பாறை நிலமே. வாயு மண்டலத்தில் இம்மியளவு ஆர்கான்(Argon), நியான்(Neon), ஹீலியம்(Helium) மிகச் சிறிய அழுத்தத்தில் சூழ்ந்துள்ளது. அப்பாறை நிலம் எங்கும் விண்கற்கள் விழுந்து விழுந்து பெருங்குழிகள் ஏற்பட்டுள்ளதை மரைனர்-10 எடுத்துக் காட்டியது. மரைனர்-10 ஆய்வுச்சிமிழ் புதனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தியில் நூற்றில் ஒரு பங்களவு இருப்பதாகக் கண்டது. புதன் பரிதியை இருமுறைச் சுற்றிவரும் காலத்திற்குள் (88 நாட்கள்), அது தன்னைத் தானே தன்னச்சில் மூன்று முறைச் சுழல்கிறது.

மார்ச் 17, 2011ல் நாசாவின் விண்ணுளவி ‘மெஸ்ஸெஞ்சர்’ ஆறரை ஆண்டுகள் பயணம் செய்து பரிதியை மிக நெருங்கிச் சுற்றி வரும் புதனை நீள்வட்டத்தில் வட்டமிட ஆரம்பித்தது. பரிதிக் குடும்பத்திலே மிகச் சிறிய புதன்க்கோள் பரிதிக்கு மிக நெருங்கிச் சுற்றுவதால் தள உஷ்ணம் சூடேறி ஈயத்தைக் கூட உருக்கிவிடத் தீவிரம் உள்ளது. பரிதியின் அத்தகையக் கடும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக்குப் போதிய வெப்பக் கவசம் இணைக்கப் பட்டுள்ளது. மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிதான் முதன்முதல் புதன் கோளை இருபுறமும் ஆராயச் சுற்றி வருகிறது. மெஸ்ஸெஞ்சர் புதனை மிகவும் நெருங்கி 124 மைல் (200 கிலோ மீட்டர்) உயரத்தில் சுற்றப் போவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணுளவியின் சுற்று நீள்வட்டக் குற்றாரம் : 124 மைல் (200 கிலோ மீட்டர்), நீளாரம் : 9000 மைல் (15,000 கிலோ மீட்டர்).

உருவத்தில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட ஓர் வடிவைப் பெற்றது புதன். அதன் விட்டம் 3030 மைல். சந்திரனைப் போல் புதனும் கரடு முரடான குழிகள் நிறைந்து, வாயு மண்டலம் எதுவும் இல்லாத ஏறக் குறைய சூன்யமான (Vacuum) சூழ்நிலையைக் கொண்டது. புதன் சுக்கிரனைப் போல் மித மிஞ்சிய சூடான (480 டிகிரி C) கோளாக இல்லா விட்டாலும், உஷ்ணம் அதிக அளவில் -180 டிகிரி C முதல் +430 டிகிரி C வரை ஏறி இறங்கி, கடும் வெப்பமும் குளிரும் ஊஞ்சல் ஆடும் ஒரு கோள். அதன் ஈர்ப்புச் சக்தி மிகவும் வலிமை அற்றது. பூமியின் ஈர்ப்பு விசை 1 என்று வைத்துக் கொண்டால், புதனின் ஈர்ப்பு விசை 0.38 தசம அளவு. அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், புதனில் 38 பவுண்டு எடைதான் காட்டும். சூரிய ஒளிமயத்தில் பரிதியை மிகவும் நெருங்கிச் சுற்றி வருவதால், புதனைத் தொலை நோக்கி மூலம் காண்பது, மிகவும் கடினம்.

நாம் வாழும் பூமி பரிதிக்கு அப்பால் 93 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. எல்லாக் கோள்களையும் விடப் பரிதியை வெகு விரைவில், மணிக்கு 100,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது, புதன். வானலைத் தட்டு (Radar) மூலம் புதனின் கதிரலைகளை ஆராய்ந்ததில், அது தன்னைத் தானே 59 நாட்களில் சுற்றிக் கொள்வது அறியப் பட்டது. பூமிக்கும் பரிதிக்கும் இடையே சுற்றி வரும் சுக்கிரன், சந்திரனைப் போன்று, புதனும் அதனுடைய 88 நாள் பயணத்தில், சூரிய ஒளியில் பிறை வடிவைக் (Crescent Phases) காட்டி, பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் பெற்று வருகிறது. ஒளிநிறப் பட்டை ஆய்வில் (Spectroscopic Analysis) புதன் கோளத்தில் மிகவும் நலிந்த வளி (Atmosphere) மண்டலமும், அதில் சோடியம், பொட்டாசியம் இருப்பதாக அறியப் பட்டது. அவற்றின் அணுக்கள் தரைப் பரப்பிலிருந்துதான் கிளம்பியிருக்க வேண்டும்.

ஒரு நூற்றாண்டில் 15 தடவை புதன், பூமிக்கும் பரிதிக்கும் இடையே குறுக்கீடு (Transit) செய்கிறது. அப்பொது பூமி, புதன், பரிதி மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமையும். அந்தச் சமயத்தில் புதன் கோள் ஒரு கரும் புள்ளியாக, பிரம்மாண்டமான பரிதியின் வட்ட முகத்தில் பொட்டு போல் தெரிகிறது. 1677ல் முதல் புதன் குறுக்கீடு காணப்பட்டுப் பதிவாகியுள்ளது. அதற்குப் பின்பு இதுவரை 44 புதன் குறுக்கீடுகள் தொடர்ந்து காணப்பட்டுப் பதிவாகி ஆராயப் பட்டுள்ளன.

பூமியின் வட துருவத்திற்கு மேல் உயரத்திலிருந்து பார்த்தால், சூரிய குடும்பத்தில் புளுடோவைத் தவிர, மற்ற எல்லாக் கோள்களும் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்) ஏறக் குறைய ஒரே மட்ட வீதிகளில் எதிர்க்-கடிகார (Counter-Clockwise) சுழற்சியில் சூரியனைச் சீராய்ச் சுற்றி வருகின்றன. கடவுளின் மகத்தான படைப்புக்கு, பிரம்மாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் ஒழுங்கு இயக்க நியதி ஓர் அரிய எடுத்துக் காட்டு. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!