மதுரையில் எலெக்ட்ரானிக் மெக்கானிக் வீட்டில் 100 கோடி மதிப்பிலான 20 கிலோ மெத்தா பெட்டமைன் பவுடர் பறிமுதல்; பவுடர் மாதிரி லேப்க்கு அனுப்பி வைப்பு – முடிவின் அடிப்படையி்ல் விசாரணை நடத்த திட்டம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி (59) இவர் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாநகர் கே.கே.நகர் வித்யா காலனி அருகேயுள்ள அய்யனார் கோவில் 2 வது தெரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் போதைப் பொருட்கள் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காலை முதல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் மற்றும் காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடத்திய சோதனையில் பவுடர் மற்றும் திரவ வடிவிலான 20 கிலோ போதைப் பொருள் போன்று பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மெத்தா பெட்டமைன் போதைப் பொருளா? அல்லது வேறு வகையானவையா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக 250 கிராம் பவுடரை சென்னையில் உள்ள பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் தமிமுன் அன்சாரியிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில் தமீம் அன்சாரிக்கு சென்னையைச் சேர்ந்த அன்பு என்ற நண்பர் மதுரைக்கு வந்தபோது ரசாயனப் பொருள் என கூறி அட்டையில் வைத்து சென்றதாகவும் தமீம் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அன்பு என்பவரிடம் விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ள்னர். இந்த சம்பவத்தில் தமிமுன் அன்சாரிக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர். கைப்பற்றபட்ட போதை பொருள் மெத்த பெட்டமைனாக இருந்தால் அதன் மதிப்பு சர்வதேச மதிப்பில் 100 கோடி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.